Monday, January 31, 2011
Friday, January 28, 2011
Thursday, January 27, 2011
Tamil Nadu Fishermen attacked! But the Govt. failed to take any required actions.
Monday, January 24, 2011
Sunday, January 23, 2011
Thursday, January 20, 2011
Tuesday, January 18, 2011
Thursday, January 13, 2011
Wednesday, January 12, 2011
Tuesday, January 11, 2011
Monday, January 10, 2011
Sunday, January 9, 2011
Saturday, January 8, 2011
Friday, January 7, 2011
Thursday, January 6, 2011
படி!
“டேய்! காப்பி போடட்டுமா?” என்ற அம்மாவை பார்த்து, ஒரு முறை முறைத்தான் முரளி. “என்னடா பாக்குற? வேணும்னா சொல்லு! போடறேன்!” என்றவளை பார்த்து, “என்னை கொஞ்சம் தனியா விடுமா! காபி! கீப்பின்ட்டு!” என்று சலித்து கொண்டான் முரளி. அம்மா ஒன்றும் சொல்லாமல் அங்கிருந்து சென்றாள். தனிமையில் தலைகுனிந்து அமர்ந்திருந்தான்.
கொத்து கொத்தாய் வளர்ந்திருந்த முரளியின் முடியினை கோதி விட்டது அந்த முதிர்ந்த கை. முரளி தலை நிமிர்ந்தான். அது அவன் தாத்தா. அவரை பார்த்து, சிரிக்க வேண்டுமே என்பதற்காக அவன் உதடு மெல்ல வளைந்தது. தாத்தா அவன் அருகே அமர்ந்தார். “என்னடா ஆச்சு? ஏன் இப்பிடி இருக்கே?” என்று கேட்டார். “ஒண்ணுமில்ல தாத்தா!” என்று மீண்டும் சலிப்பு தட்டிய குரலில் பதிலளித்தான். “முரளி! இங்க பாரு! ஏதோ குழப்பத்துல இருக்கேன்னு தெரியுது! என்ன விஷயம்ன்னு சொல்லு! அப்பத்தான் உன் குழப்பம் தெளிஞ்சு நல்ல வழி தெரியும்!” என்றார் தாத்தா, தன் மென்மையான குரலில்.
“அடுத்த வாரம் ஒரு டெஸ்ட் வெச்சிருக்காங்க தாத்தா, காலேஜ்ல... அதாவது எல்லாரும் ஏதாவது ஒரு புத்தகத்தை முழுசா படிச்சிட்டு வரணுமாம். அதை பத்தி மேடையில பேசணுமாம்! அதுக்குதான் அதிக மார்க்காம்! இந்த வருஷம் தான் புதுசா செத்திருக்காங்களாம்!” என்று மீண்டும் தலை குனிந்தான் முரளி. “அதுல என்னடா பிரச்சனை?” என்ற தாத்தாவின் கேள்விக்கு, சட்டென்று மீண்டும் தலை நிமிர்ந்து, “கீழே ஆடியன்ஸ் யார் தெரியுமா? எங்க சீனியர்ஸ்! சும்மாவே பர்ஸ்ட் இயர்ஸ்ன்னா ஓட்டி தள்ளுவாங்க! இதுல இந்த சங்கடம் வேற!? தொலஞ்சோம்!” என்று நெற்றியில் அடித்த படி, தன் தரப்பு சங்கடங்களை தாத்தா முன் வைத்தான் முரளி!
சிரித்து கொண்டே தாத்தா, “இவளோ தானா? நான் ஏதோ பெரிய பிரச்சனையா இருக்கும்ன்னு நினைச்சேன்!” என்றார். “ஆஹ! உங்களுக்கு இது சிரிப்பா இருக்கும்! அதுல இருக்குற சிக்கல், பிரச்சனை எனக்கு தானே?” என்று பெருமூச்சை சூடாக விட்டான் முரளி. “இது நல்ல விஷயம் தான! ஒரு புக் படிச்சு! நீ என்ன படிச்ச, என்ன உணர்ந்த, இதெல்லாம் மேடை ஏறி உன் சீனியர்ஸ், நண்பர்கள், ஆசிரியர்கள் முன்னாடி சொல்றது பெரிய விஷயம் தானே! சந்தோஷமான விஷயமும் கூட! வேற என்ன பிரச்சனை உனக்கு?” என்றார் தாத்தா.
“ஸ்கூல்ல படிக்கிற வரைக்கும் சிலபஸ் இருக்கும்! அதுல என்ன கொடுத்திருக்கோ அதை தான் நான் படிச்சேன். வேற எந்த புத்தகத்தையும் நான் படிச்சதில்லையே?! ஆமா.... தெரியாம கேக்குறேன் தாத்தா! நாம ஏன் புக் படிக்கணும்? அதனால என்ன நல்லது நடக்க போகுது? சும்மா... தூக்கம் தான் வரும்! போரு!” என்ற முரளியின் பேச்சில் அலுப்பு தட்டியது.
அதற்கு தாத்தா, “இதுதான் பிரச்சனை முரளி கண்ணா! ஸ்கூல்ல படிக்கிற காலத்துலேயே அவங்க சொல்ற பாடத்தை மட்டுமே படிச்சு மனப்பாடம் பண்ணி, பரீட்சை எழுதி, நூறு மார்க் வாங்குறதால உன்னோட மேல் படிப்புக்கு மட்டும் தான் உன்னையே நீ தயார் பண்ணிக்கிட்டே! அவ்வளவுதான்! ஆனா உன் வாழ்க்கைக்கு? உனக்கு நல்லது கெட்டது எதுன்னு நீயே பிரிச்சு பார்த்து தெரிஞ்சுக்க?” என்ற கேள்வியை முரளி முன் வைத்தார். “அதுக்கு தான் அனுபவம் இருக்கே தாத்தா! அனுபவ அறிவு தானே பெருசுன்னு சொல்லுவாங்க?” என்று தாத்தாவிற்கு கிடுக்குப்பிடி போட்டு, பதில் வேண்டி புருவம் உயர்த்தி பார்த்தான் முரளி. “ஒரு புத்தகம் படிக்கிறதே அனுபவம் தானே கண்ணா! ஒரு நாவல், சிறுகதை, வாழ்க்கை வரலாறு படிக்கும் போது, நீ ஒரு புது விஷயத்த, புது உலகத்த அனுபவிக்கிறடா! எங்கே நீ படிச்ச ஒரு நாவலோ சிறுகதையோ இல்ல கவிதை பத்தி சொல்லு பார்ப்போம்?” என்ற தாத்தாவின் கேள்விக்கு, திருதிருவென முழித்தான் முரளி.
அமைதியில் இருந்தவன் சட்டென்று, “தாத்தா! இந்த நாவல் கவிதை படிக்கிறது எல்லாம் மீடியா ஆளுங்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் தான் தேவை! நான் மைக்ரோ பையாலாஜி மாணவன்! எனக்கு எதுக்கு இதெல்லாம்?” என்று வருந்திய குரலில் பதில் வந்தது முரளியிடமிருந்து.
தாத்தா சற்றே யோசித்த படி, “ஆங்... நீ அப்பிடி வர்றியா... சரி! நீ சொல்றபடியே வர்றேன். நீ ஒரு மனுஷன். நீ இப்போ ஒரு கரையில இருக்க. உன் முன்னாடி ஒரு பெரிய கடல் இருக்கு! சாதாரண கடல் இல்ல! கடலுக்கு எல்லாம் கடல்! பெருங்கடல்! நீ இப்போ நிக்கிற கரையில இருக்கிற எல்லா இடத்தையும், அங்க இருக்குற சந்து பொந்து எல்லாத்தையும் தெரிஞ்சிக்கிட்ட. இனி அந்த கரையில நீ தேடவோ பார்க்கவோ எதுவுமே இல்ல. உன் கண்ணு முன்னாடி இப்போ ஒரு பெருங்கடல், அதை தாண்டி ஒரு கரை தெரியுது. நீ என்ன பண்ணுவ?” என்ற கேள்வியை முன் வைத்தார் தாத்தா. கண்களில் சிறு தெளிச்சியுடன், “நான் இருக்குற கரையில எல்லாத்தையும் தெரிஞ்சிக்கிட்டேன்னா... அந்த தொலைவுல தெரியுற கரைல என்ன இருக்குன்னு பார்க்க போவேன்!” என்றான் முரளி.
“எப்படி போவ?” என்று தாத்தா வினவ,
“நீந்தி தான்!” என்றான் முரளி.
“நீச்சல் குளத்துல நீந்தும் போது உனக்கு பாதுக்காப்பு இருக்கும் கண்ணா. ஆனா உன் முன்னாடி இப்ப இருக்கிறது பெருங்கடல்! அதோட ஆழம் எவ்வளவு?அலை அடிக்கும்! அதை சமாளிச்சு, போராடி போகணுமே! எப்பிடி நீந்துவே?” என்று கண் விழித்து காட்டினார் தாத்தா.
“ம்ம்ம்... தெரியல தாத்தா! நீங்களே சொல்லுங்க!” என்று விடை அறிய ஆவல் முரளி கண்களில் தெரிந்தது.
“சரி! நீ இந்த கரையில பார்த்து, படிச்சு, தெரிஞ்சிக்கிட்ட விஷயங்கள சேர்த்து ஒரு படகு நீ செய்யற... அந்த படகுல ஏறி, முன்னாடி இருக்குற பெருங்கடல்ல போற... அந்த பெருங்கடல் பேரு என்ன தெரியுமா?” என்று தாத்தா புதிர் போட,
“அய்யோ தெரியல தாத்தா! சொல்லுங்க சீக்கிரம்!” என்று பறந்தான் முரளி.
சிரித்த படியே தாத்தா, “அந்த பெருங்கடல் தான் உன்னோட புத்தக அறிவு! அதுதான் நான் சொன்ன நாவல்கள், கவிதைகள், வாழ்க்கை வரலாறுகள், புதினங்கள், சிறு கதைகள் எல்லாம்! அந்த அக்கரை தான் உன்னோட வாழ்க்கையோட அடுத்த படி! அங்க போகன்னும்ன்னா, உன்னோட அனுபவ படகேறி, அந்த பெருங்கடல் வழியா தான் பயனிக்கணும்! அப்பிடி பயனிச்சாத்தான், அக்கரையில நீ நிறைய கத்துக்க முடியும். நல்லத கத்துக்க முடியும்! இப்ப புரிஞ்சுதா?” என்று தாத்தா வினவ, தெளிந்த கண்களுடன் சிரித்தான் முரளி!
“இன்னொரு விஷயம் கண்ணா! நான் சொன்ன பெருங்கடல்ல நல்லதும் இருக்கும், கெட்டதும் இருக்கும்! நல்லது படிச்சு போனா, நீ பண்ண போறது சாதனை! தேவையில்லாதது, எந்த விதத்திலும் உதவாதவைகளை படிச்சிட்டு போன உனக்கு தான் வீண் ரோதனை, அனாவசியமான தலை வேதனை! ஆஹா! பேசி பேசி புது பஞ்ச் டயலாக்கும் வருதே!” என்று கண் மலர்ந்து சிரித்தார் தாத்தா. முரளியும் அவருடன் சிரித்த படியே, “சரி! நீங்களே சொல்லுங்க! ஒரு நல்ல புத்தகத்த, அதிலிருந்து ஆரம்பிக்கிறேன்!” என்றான் முரளி. “ம்... முதல்ல சுவையான புத்தகத்திலிருந்து ஆரம்பி, வைரமுத்து எழுதுன ‘கொஞ்சம் தேநீர், நிறைய வானம்’ படி!” என்று பேசிய படி அந்த இனிய மாலை பொழுது கனிந்தது.
- பி.சி.பாலசுப்பிரமணியம்.