Monday, February 28, 2011
Saturday, February 26, 2011
Friday, February 25, 2011
Thursday, February 24, 2011
Wednesday, February 23, 2011
Monday, February 21, 2011
Sunday, February 20, 2011
Saturday, February 19, 2011
Friday, February 18, 2011
நிதானித்து நட!
தட்டில் சுடச்சுட இட்லிகள் வந்திறங்கின! அஜய் ரசித்து ருசித்து சாப்பிட்டு கொன்டிருந்தான். “அம்மா! இன்னும் ஒரு நாலு கொண்டா...” என்ற படி காதில் மாட்டியிருந்த கருவி மூலம் இசை மழையில் நனைந்து கொண்டிருந்தான் அஜய். முணுமுணுத்த படியே உணவும் உள்ளே இறங்கி கொண்டிருந்தது. அப்போது குளியலறையிலிருந்து அப்பா வந்தார். முணுமுணுத்துக் கொண்டு, சிறு ஆட்டம் ஆடிய படி அஜய் சாப்பிடுவதை பார்த்து அப்பா தலை துவட்டிய படி, “ஏன்டா இப்ப லேப் டாப் வாங்கின?” என்று வினவினார். பாடல்களை நிறுத்தி விட்டு, மிக கூர்மையான பார்வையுடன் அப்பாவை நோக்கி, “ஏன் வாங்க கூடாது? நான் சம்பாதிக்கிறேன்! எனக்காக நான் வாங்குறேன்!” என்று பதிலளித்து இட்லியை மீண்டும் ருசிக்க ஆரம்பித்தான் அஜய். அம்மா இதை எல்லாம் சமையலறையிலிருந்து கேட்ட படியே தன் வேலையில் மூழ்கியிருந்தாள். “சரிடா! இங்க வீட்டில ஒரு கம்ப்யூட்டர் இருக்கே! அப்புறம் எதுக்கு இன்னொன்னு?” என்று அப்பா கேட்க, இட்லி மேல் சட்னி கொஞ்சம் ஊற்றி விட்டு “அதெல்லாம் சொன்னா உனக்கு புரியாது! எனக்கு, என் வேலைக்கு எல்லாம் அது தேவை!” என்று கடுகடுப்பாக பதில் சொன்னான் அஜய். “சரி! அப்போ வீட்டில இருக்குற இந்த கம்ப்யூட்டர்?” என்று விடாப்படியாக அப்பா கேள்வி மீண்டும் தொடுக்க கோபம் மூண்டு, “அய்யோ! நிம்மதியா சாப்பிட கூட விட மாட்டியா? தொனதொனன்னு...” என்று சட்டென எழுந்து கை கழுவினான் அஜய். “ஆமா! வீணா தண்ட செலவு பண்ணிக்கிட்டே இரு! வேலைக்கு சேர்ந்து நாலு மாசம் தான் இருக்கும்! அதுக்குள்ள தாம் தூம்ன்னு செலவு பண்ணிக்கிட்டு! சேமிச்சு வை! சேமிச்சு வைன்னு எத்தனை தடவ சொல்லியிருக்கேன்!” என்று அப்பா பொறிந்து தள்ளி கொண்டிருக்க, அஜய் சமையலறை சென்று தண்ணி குடிப்பது போல் மெல்ல அம்மாவிடம், “ஏம்மா இப்பிடி இம்சை பண்ணிக்கிட்டே இருக்காரு? நான் சம்பாதிச்சு வாங்கினா தப்பா? சும்மா....” என்று அஜய் மெத்தன பார்வையுடன் சொல்ல, அம்மாவோ, “ஏன்? அவர் சொல்றதுல என்னடா தப்பு இருக்கு? வேலை கிடைக்காம திரியுற காலத்துல காசு மேல உனக்கு அக்கறை இருந்துச்சு! இப்போ! நாலு காசு பார்க்க ஆர்ம்பிச்சவுடனே தண்ணி மாதிரி செலவு பண்ணுனா, அப்பா இல்ல எல்லாரும் கேள்வி கேட்பாங்க!” என்றார் அம்மா!
கோபம் இன்னும் பல நூறு டிகரிகளை தாண்டியது அஜய்யிற்கு!
தனது பொருட்கள் எடுத்து வேகமாய் வீட்டை விட்டு வெளியேறினான். “டேய்! என் மேல இருக்குற கோபத்த சாப்பாடு மேல காட்டாத! வந்து முழுசா சாப்டிட்டு போ!” என்றார் அப்பா. திரும்பி அப்பாவை பார்த்தான் அஜய். பின்னால் அம்மா, மதிய உணவு பெட்டியுடன் நின்றிருந்தாள். “ஆபிஸ் பக்கத்துல ஹோட்டல் இருக்கு! அங்கே சாப்பிட்டுகிறேன்! என்னை பத்தி யாரும் கவலைப்பட வேண்டாம்!” என்று விறுவிறுவென தன் இரு சக்கர வாகனம் ஏறி கிளம்பினான் அஜய்.
ரோட்டில் செல்லும் போது, அப்பா காலையில் பேசியது அவன் காதுகளில் ஒலித்து கொண்டே இருந்தது. சூரியன் அன்று சக்கை போடு போட்டு கொண்டிருந்தது. இவனோ அதை விட மிஞ்சும் சூட்டில்! அது சாலையின் முக்கிய சந்திப்பு. எப்போதும் நெரிசல் அதிகாமாகவே காணப்படும்! அஜய்யின் வண்டி முன்னால் ஒரு வெள்ளை நிற சட்டை அணிந்த ஒரு இளைஞன், வண்டியை மிக மெதுவாக ஓட்டி கொண்டிருந்தான். “வேகமா போய் தொலைய மாட்டங்க!” என்று முணுமுணுத்துக் கொண்டே இருக்கையில், காலையில் அம்மா அப்பா உதிர்த்த வார்த்தைகள் மீண்டும் மீண்டும் அவன் காதுகளை துளைத்து! வெப்பமும் அதிகரிக்க சட்டென்று, “டேய்! வேகமா வண்டி எடுடா!” என்று முன்னால் இருப்பவனை நோக்கி ஒரு சத்தம் போட்டான் அஜய். அந்த முகம் அஜய்யை திரும்பி பார்த்தது. அவன் இளைஞன் அல்ல, நாற்பது வயது நிரம்பிய ஒருவர்! முறுக்கு மீசையுடன் கோபமாய் பார்த்தார். அஜய்யிற்கு ஒரு நிமிடம் இதயம் நின்றது, நாக்கு வறண்டு போனது! அந்த மீசைக்காரர், “என்னடா சொன்ன? ‘டா’ போட்டு கூப்பிடுறியா? நான் யார் தெரியுமா?” என்று வண்டியை ரோட்டில் அங்கேயே நிறுத்தி விட்டு, தன் மீசையையும் புஜங்களையும் முறுக்கிய படி அஜய் நோக்கி வந்தார். கூட்டம் கூடியது! ‘நம்ம வட்ட செயலாளர் பாண்டி அண்ணன் தானே அது!’ என்று கூட்டத்தில் யாரோ யாரிடமோ கேள்வி கேட்டது அஜய்யிற்கு இன்னும் பயத்தை கூட்டியது. வெகு நேர பேச்சு, அதட்டலுக்கு பிறகு அஜய் அந்த மீசைக்காரரிடம் மன்னிப்பு கேட்டவுடன், மீசைக்காரர் தன் மீசையை முறுக்கிய படியே அங்கிருந்து சென்றார். அந்த கூட்டம் கலைந்தது. அதன் பின் அஜய் அங்கே தன் வண்டியில் அமர்ந்த படி இழுத்து ஒரு மூச்சு விட்டான். அவனும் அங்கிருந்து கிளம்பி அலுவலகம் வந்து சேர்ந்தான்.
தன் இருக்கையில் அமர்ந்து விட்டு, அருகில் இருந்த பாட்டிலில் இருக்கும் தண்ணீரை முழுவதுமாய் குடித்து முடித்தான். அப்போது, “சார்! இனிய காலை வணக்கம்!” என்ற ஒரு குரல் கேட்டது. அஜய் முன்னால் அந்த அலுவலகத்தில் வேலை செய்யும் கடை நிலை ஊழியன் முனியன் நின்று கொண்டிருந்தான்.
மூக்கு சிவந்து, கண்கள் நீர் நிறைய எதிரில் நின்ற முனியனை திட்ட வாய் எடுத்தான் அஜய். சாலையில் நடந்த அமளிதுமளி ஒரு கனம் அவன் கண் முன் ஓடியது!
சட்டென கோபம் கனல் சிரிப்பு பூக்களாக மாறி அவன் வாய் வழி, “இனிய காலை வணக்கம்!” என்றது. “படபடப்பா இருக்கீங்க! இருங்க! உங்களுக்கு ஒரு கப் காபி கொண்டு வர்றேன் சார்!” என்று சிரிப்புடன் அங்கிருந்து சிட்டாய் பறந்தான் முனியன். மீண்டும் ஒரு பெருமூச்சு விட்டப் படியே தன் இருக்கையில் சாய்ந்து கொண்டான் அஜய்.
- பி.சி.பாலசுப்பிரமணியம்.