Sunday, December 29, 2019

Happy New Year to RMM Members!


அயராத உழைப்பும்
அளப்பரியா அர்ப்பணிப்பும்
கொண்டு தமிழகம் முழுதும் நற்பணிகள் பல மேற்கொண்ட ரஜினி மக்கள் மன்ற
காவலர்களுக்கு இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துகள்!

Wednesday, December 11, 2019

Happy birthday Thalaivar Rajinikanth


தன்னை பின் தொடரும் ரசிகர்கள் மற்றும் மக்களுக்கு,
நல்லவைகள் கொடுத்து,
அல்லவைகள் அறவே தவிர்த்து,
எளிமையே அணிகலனாய் அணிந்த
நல்மனிதனுக்கு ரசிகனாய் இருப்பதில் பெருமை கொள்வோம்!

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்
தலைவா!

அன்றும் இன்றும் என்றும்
ஒரே சூப்பர்ஸ்டார்!
நீங்க மட்டும்தான்!

இதுவரையும் இல்ல...
இனியும் வாய்ப்பில்ல!
உங்க உயரத்தின் நிழலை கூட இன்னொருவன் தொட!

Like always, Keep Inspiring us Thalaiva
2021 நமதே!

திருஅண்ணாமலை விஜயம்

வெகு நாளாய் மனதில் இருந்த தீரா ஆசை, திருவண்ணாமலை மகா தீபம் நேரில் காண வேண்டும் என்பது. இவ்வருடம் அப்பாக்கியம் கிட்டியது! 






திருவண்ணாமலை செல்வோமா, முடியுமா, அவர் விருப்பம் என்னவோ என்று பல குழப்பங்கள். ஒரு வழியாக திங்கள் காலை சென்னையிலிருந்து பேருந்து ஏறி, மதியம் திருவண்ணாமலை அடைந்தேன். நீண்டு நிமர்ந்து படர்ந்து கிடக்கும் மலையோன் வரவேற்றார்! பல திவ்யர்கள் வாழ்ந்து மறைந்தும் வாழ்ந்து கொண்டிருக்கும் புண்ணியப்பூமியின் ஸ்பரிசம் உணர்ந்தேன்.
மதிய உணவு முடிந்து, சிறிது இளைப்பாறிவிட்டு, அருணாசலேசவரரை தரிசிக்க நீண்ட பெரும் வரிசையில் நின்றேன். மக்கள் அலை, மலை அடிவாரத்தை சூழ்ந்து கொண்டது போல் இருந்தது. சாலைகளே கண்ணுக்கு தெரியாத வண்ணம் மக்கள் பெருங்கூட்டம்!















தனியே வரிசையில் சென்று கொண்டிருந்த எனக்கு முதியவர் ஒருவரின் நட்பு கிட்டியது. கூட்டத்தில் எனக்கு முன் அவர், பல இடங்களில் தள்ளாடினார். அவரை தாங்கி கொண்டேன். தண்ணீர் அருந்த சொன்னேன். அப்படி எங்களுக்குள் உரையாடல் துவங்கியது. பெரும் தள்ளுமுள்ளுக்கு இடையில் அவரை பாதுகாக்க வேண்டும் என்று மனதில் நினைந்து கொண்டேன். அது போலவே தரிசனம் முடிந்து வெளியே வரும் வரை ஒன்றாகவே பயணத்தோம். அவர் எனது பெயர், ஊர் பற்றி கேட்டு தெரிந்து கொண்டார். நான் அவரை பற்றி ஏதும் கேட்கவில்லை, கேட்கவும் தோன்றவில்லை. அவரது திருவண்ணாமலை அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். பின் திருவண்ணாமலை அருணாசலேசவரர் பற்றி பேசும் உதடுகள் ரமண மகரிஷி பற்றிய உரையாடாது இருக்காது. அந்த பெரியவரும் அவரது ரமணானுபவம் பற்றி பகிர்ந்துகொண்டே வந்தார். மனதினுள் இருந்ததை கொட்டகொட்ட, அவரை அறியாமலேயே அவர் கண்கள் ஆனந்த கண்ணீர் சொறிந்தது. ரமணர் வழி பயணித்த அத்தனை அன்பர்களுக்கும் இத்தகை அனுபவம் இருக்கும்!

அந்த பெரியவரிடம் கிரிவலம் பற்றி கேட்டேன். நானும் அவருடன் சேர்ந்து நடக்கலாம் என்று உறுதி செய்துகொண்டேன். அண்ணாமலையாரும், உண்ணாமலை அம்மனையும் தரிசித்துவிட்டு வெளியே வர, அந்த பெரியவர் 20 ரூபாய் காசு கொடுத்து போய் பிரசாதம் வாங்கி வர சொன்னார். நீண்ட பெரும் கூட்டத்தில், வெகு நேரம் நின்ற களைப்பு, ஓரமாக அமர்ந்து கொண்டார். நான் பிரசாதம் வாங்கி வர, இருவரும் அமர்ந்து அதை உண்டோம். அதன் ருசியை உரைக்க வார்த்தைகள் இல்லை!

பின்பு அங்குள்ள பாதாள லிங்கம் தரிசிக்க வேண்டும் என்று கருதியிருந்தேன். பெரியவர் களைத்திருந்ததால், வெளியே அமர்ந்து கொண்டார். பாதாள லிங்கம் தரிசிக்க செல்லும் முன், ரமணரின் கண்களை தரிசித்தேன். அந்த இடத்தில் எங்கேனும் ரமணர் தெரிவாரா என்று என் கண்கள் தேடின. பாதாள லிங்கத்தின் அருகில் அன்ன ஆகாரமின்றி, சதா சிவனை நினைந்து, பல இடையூறுகளுக்கு ஆளாகி, பரப்பிரம்மத்தை உணர்ந்த ரமணரின் அனுபவம் என்னுள் அலையலையாய் பெருக்கெடுத்தது. அங்கு தரிசனம் முடிந்து வெளியே வந்து பார்க்கையில், உடன் வந்த பெரியவரை காணவில்லை. சுற்றி தேடிப்பார்த்தும் தென்படவில்லை. வருந்தினேன். கோயிலின் உள்ளே நுழைந்ததில் இருந்து பாதாள லிங்கம் தரிசிக்கும் வரை உடன் இருந்தவரை காணவில்லையே என்று கவலையுற்றேன். அருணாசலேசவரர் சந்நிதியில் அவருடன் பயணித்தது சுபநிமித்தம் என்பதை உணர்ந்தேன்.

கோயிலுக்கு வெளியே வந்து, சரியாக இரவு 9.45 கிரிவலம் தொடங்கியது. தனியே நடந்தேன். அஷ்டலிங்கங்களையும் தரிசித்தேன். ரமணாஸ்ரமம், சேஷாத்ரி சுவாமிகள் ஆஸ்ரமம், யோகி ராம்சுரத்குமார் ஆஸ்ரமம் எல்லாம் கண்டு நெகிழ்ந்தேன். வழியெங்கும் பல அன்பர்கள் அன்னதானம் வழங்கினர். திங்களன்று வானில் திங்கள் ஒளியின் வழிக்காட்டுதலோடு மலையை வலம் வந்தேன். கார்த்திகை குளிரில், வெறும் கால்கள் நடந்தேன். குளிரின் தாக்கம் ஒன்றும் செய்யவில்லை. ”ஓம் நமசிவாய!” என எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் மந்திர குரல் கிரிவலப்பாதை முழுதும் நிறைந்திருந்தது. அது மனதை சாந்தப்படுத்தியதோடு உத்வேகமும் கொடுத்தது.

என் அம்மா அப்பாவை நினைந்து கொண்டேன். கிரிவலம் வருவதால் கிட்டும் நற்பலன்கள் அவர்களுக்கும் கிடைக்க வேண்டினேன். பின் என் தங்கை மகனை நினைந்து வேண்டினேன். அவனுக்கு என்றும் நீ துணை நிற்கவேண்டும் இறைவா என்று இறைஞ்சினேன். என் வாழ்வில் எனக்கு கிடைத்த மிக முக்கியமான பொக்கிஷம் அவன் தான்! அவனை நல்லபடியாக பார்த்துகொள் இறைவா என்று வேண்டிகொண்டேன். பல மனக்குழப்பங்கள், பிரச்சனைகளில் வாடி வாழும் என் சொந்தங்கள் பந்தங்கள், நண்பர்கள், ஜூனியர்களை நினைந்து கொண்டேன். எல்லோருக்கும் நல்வழிக்காட்டிட வேண்டினேன்.

அந்த அடர்குளிரில் சுடசுட சுக்குகாபி நா தொட்டு, தொண்டை குழியில் இறங்க, வேகம் இன்னும் கூடியது. வழியில் கிடைத்த ஒரு கையளவு அன்னத்தால் அத்தனை பசியும் அடங்கியது. வேதனை என்னவெனில், பலர் தங்களுக்கு கிடைத்த அன்னத்தை தரையில் வீசி எறிந்துள்ளனர். கிரிவலப்பாதை ஓரங்களில் அத்தனை சாப்பாடும் வீணாய் கிடந்ததை கண்டு மனம் வாடியது. இந்த பெருந்தவறை செய்தோரை அன்னதானபிரபு மன்னிக்கவே மாட்டார். அதுவும் அவர் கண்முன்னே நடக்கும் இந்த அவலத்தை என்னவென்று சொல்வது?! கோவிலுக்கு உள்ளே உடல் குறுக்கி, கை உயர்த்தி தொழுவதால் எந்த பலனும் கிட்டபோவதில்லை! அப்படி பொங்குவது பக்தியல்ல, வெறும் வேஷம் என்பதுதான் உண்மை. அன்னத்தை வீணடிப்பது என்பது இறைவனுக்கு நாம் செய்யும் மிகப்பெரிய அநீதி! பசித்த வயிறு இங்கு ஏராளம்! அதை உணர்ந்து வாழ்தல் அவசியம்!

வெகுதூரம் நடந்து கால் வலி பிடித்துகொண்டது. தெருவோரங்களில் அமர்ந்து இளைப்பாறி மீண்டும் நடந்தேன். ஓரிடத்தில் மனம் விசும்பி அழுதது. நம்பி உடனிருந்த, உயிருக்கு உயிராய் நினைத்திருந்த ஜீவன் ஒன்று என்னையும் உன்னையும்(எம்பெருமானை) உதாசினப்படுத்தி விட்டு சென்றதை நினைத்து வருந்தினேன். அழுதேன். இன்று காலத்தின் கட்டாயம் காரணமாக பிரிந்து வாழும் வரமே எங்களுக்கு விதிக்கப்பட்டுள்ளதை உணர்ந்து, மனம் கசங்கி கண்ணீர் சிந்தியது! எங்கிருந்தாலும் நல்லாயிருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டேன்… அப்போது எங்கிருந்தோ பறந்து வந்த குளிர் தென்றல் ஒன்று, என்னை சுற்றி படர்ந்து, ஆசுவாசப்படுத்தியது. ”நற்றுணையாவது நமச்சிவாயமே!” என்று உணர்த்தியது. அடுத்த அடி எடுத்தவைக்க கால்கள் தயாராகின.

”பத்து ரூபா! பத்து ரூபா! எது எடுத்தாலும் பத்து ரூபா!” என்று கூவிக்கூவி அழைத்து வியாபாரம் செய்து கொண்டிருந்த தெருவோர வியாபாரிகள். கிரிவலப்பாதையில் துள்ளிகுதித்து விளையாடி மகிழ்ந்த சிறுப்பிள்ளைகள். அவர்கள் சிரிப்பொலியில் மனம் குளிர்ந்திருக்கும் சிவனை நினைந்து கொண்டேன்.

”குழந்தை பாக்கியம் கிடைக்க, வீடு நிலம் வாங்க, செல்வம் கொழிக்க, லட்சுமி கடாக்‌ஷம் பெற, இந்த படத்தை உங்க வீட்டுல மாட்டுங்க! பத்து ரூபா தாங்க! பத்தே ரூபாயில உங்க தலையெழுத்தையே மாத்துங்க! வாங்கம்மா! வாங்கய்யா!” என்று ஒரு புகைப்படத்தை விற்றுக்கொண்டிருந்த பெண்ணை பார்த்ததும், கால் வலி கூட பொருட்படுத்தாமல், வேகமாய் நடையை கட்டினேன்!

கடைசியாக நான் தங்கும் விடுதியை அடைந்தேன். கால் வலி பின்னியெடுத்தது! காலுக்கு உள்ளே உள்ள எலும்பு, தசை, நரம்பு, ரத்த ஓட்டம் அத்தனையும் உணர முடிந்தது! ”ஓம் நமசிவாய!” என்று படுத்து உறங்கியதுதான் தெரிந்தது. விடிந்து எழுந்தது பேரிரைச்சல் கேட்டுதான்! ஆம்! மக்கள் வெள்ளம் இன்னும் இன்னும் பெருக்கெடுத்து வந்து கொண்டிருந்தது. குளித்து முடித்து மக்கள் வெள்ளத்தில் மீண்டும் கலந்தேன். அதுவே என்னை அடித்து இழுத்து ராஜகோபுரம் முன் கொண்டு சென்று நிறுத்தியது.


நான்கு புறம் உள்ள கோபுரங்களை தரிசித்தேன். கோயிலுக்கு உள்ளே உள்ள சிற்பங்கள் கண்டு வியந்தேன். இவை மனிதனால் செதுக்கப்பட்டவை அல்ல, அந்த கடவுளே மனித ரூபத்தில் பூலோகத்தில் நிகழ்த்திய அற்புதங்களாகவே நம்புகிறேன். சிலையின் நகங்கள், நடனம் புரியும் போது புடைத்து நிற்கும் நரம்புகள், கோபமூண்ட சிலைக்கண்டால் நமக்கும் கோபம் தொற்றி கொள்ளும், சாந்தம் சொறியும் சிலைக்கண்டால் நம் கண்கள் மெளனித்து நிற்கும் அதிசயம்! யார் இவற்றை எல்லாம் செதுக்கியது, அவர்கள் எங்கே போனார்கள், இன்று அவர்கள் இருந்திருந்தால்… என்று பல எண்ணங்கள். கண்குளிர கண்டு அடுத்து நகர்ந்தாலும், கண் அகல மறுக்கும் தெவிட்டா இன்பம் அண்ணாமலையார் கோயில் சிற்ப வேலைப்பாடுகள்! அத்தருணத்தில் “தெரிந்தது கையளவு! தெரியாதது உலகளவு!” எனும் வரிகளின் அர்த்தம் புலப்பட்டது.

மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது.




ஜோதி வடிவானவனை கண்டு அகமகிழ்ந்தேன். இப்பேறு கிடைத்தமைக்கு எம்பெருமானுக்கே நன்றி தெரிவித்தேன். திருவண்ணாமலையே தீபாவளி கொண்டாடியது!

வீடெங்கும், தெருவெங்கும் தீபங்கள். “அண்ணாமலையானுக்கு அரோகரா!” எனும் மந்திரமே அங்குள்ள அத்தனை உதடுகளும் இடைவிடாது உச்சரித்தன. பலர் கண்கள் குளமாகி, பலர் உள்ளம் கசிந்து உள்ளுருகி வேண்டி, சிலர் கைக்கூப்பி சிலையாய் ஜோதியை கண்ட வண்ணம்… அத்தனை அன்பர்களையும் கண்டு புன்சிரிப்பை அருளும் சிவனை நினைந்து கொண்டேன். 

திருவண்ணாமலை தீபம் இத்தனை விமர்சையாக, பெரும் பக்தர் கூட்டம் திரள கொண்டாட இன்னொரு காரணம் தலைவர் ரஜினிகாந்த் என்று அங்கிருந்த மக்கள் பலரும் கூறினர். சத்தமில்லாமல் தலைவர் ரஜினிகாந்த் திருவண்ணாமலைக்கு செய்த நற்பணிகள் ஏராளம். அவற்றை எல்லாம் சிலாகித்தபடி பெருமையாய் சொன்னார்கள் திருவண்ணாமலைவாசிகள். டீக்கடை, ஆட்டோக்காரர்கள், தங்கும் விடுதி உரிமையாளர் முதல் வேலையாள் வரை, கிரிவலப்பாதையில் பொரிகடலை விற்ற ஒரு தம்பதியர், என பலர் உரைக்க கேட்டேன், தலைவர் ரஜினிகாந்த் செய்த உதவிகள் பற்றி! அத்தருணங்களில் தலைவர் ரசிகன் என்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சியளித்தது! நல்ல மனிதர்! அருணாசலன் ஆசி என்றும் அவர்க்கு உடனிருக்கும்! 

திருத்தலங்கள் செல்வது என்பது எளிதில் நடக்காத காரியம். நம்மிடம் அளவற்ற செல்வம், பல வசதிகளும் இருக்கலாம். ஆனாலும் வீட்டின் அருகில் இருக்கும் ஆலயம் செல்ல வேண்டுமென்றாலும் கூட, அங்குள்ள இறைவன் மனம் கனிய வேண்டும்.

“எனக்கென்ன… இப்ப நான் நெனச்சாலும் திருப்பதி போவேன்! திருவண்ணாமலை போவேன்!” என்று ஒருவர் சொன்னாலும், அத்திருத்தலம் சென்று தரிச்சித்தாலும், அதில் அவர் திறமை, மகிமை ஏதுமில்லை. இறைவன் விருப்பம் மட்டுமே நிறைவேறுகிறது.

”வா அன்பா! நான் உன்னை காண விழைகிறேன். வந்து என்னை தரிசித்துவிட்டு போ!” என்று அவர் நினைக்க வேண்டும்! அப்படிதான் ஏதொரு திருத்தலத்திலும் நமது கால் தடம் பதிய முடியும்!

நல்ல வேலை, நல்ல வருமானம் என்று எல்லாம் இருந்தபோதும் கூட நான் விரும்பி செல்ல நினைந்த எந்த கோவிலுக்கும் போக இயலவில்லை. இப்போது சர்வமும் சூன்யமாகி, எடுத்து வைக்கும் அடியில் எல்லாம் அடிகள் பல விழுந்து, அடுத்த அடி வைக்க தயங்கி குழம்பி நின்றிருக்க… இறைவன் அழைக்கிறான். எல்லாம் அவன் சித்தம்!

எத்துணையும் இல்லாது நிற்கதியாய் நிற்கும் மனிதர்க்கு இறைவன் துணை நிற்பார் என்பது நான் உணர்ந்த உன்னதமான உண்மை.

இத்தனையும் என்னால் அல்ல என்பதுதான் நிதர்சனம். என் தாய் தந்தையின் பிரார்த்தனை, என் தாத்தா பாட்டி மூதாதையரின் அருளாசி. இவைகளால் மட்டுமே அருணாசலேசவரர் கண்டு தரிசிக்கும் பாக்கியம் அமைந்தது!

அருணாசலேசவரா…

நமச்சிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க!