துறுதுறுவென்றசையும் கழுத்து
காண்போரை கவர்ந்திழுக்கும் கண்கள்
தூரல் மழைத்துளி பேச்சு
கண்மணியாம் என் சிட்டுக்குருவி!
என் வீட்டினிலே
அழகிய கூட்டினிலே
எழில் மகள் அவள் வேண்டியன
அனைத்தையும் அளித்தேன்
எண்ணற்ற அவள் முத்து பேச்சினை ரசித்தேன்!
அனுதினம் அவள் கொஞ்சல்களில் மெய் மறந்தேன்!
ஒரு நாள்...
அழகிய மாலைப் பொழுதினிலே
அவள் என் கவனத்தை ஈர்த்தாள்
"என்னடி கண்மணி?" என கேட்டேன்
"எனக்கென்று விடுதலை?" என்றாள் அவள்
ஒரு கனம் இருவரும் மெளனத்தில் ஆழ்ந்தோம்
ஏன் என்பது போல்
என் விழிகள் அவளை நோக்கியது
ஏக்கம் நிறைய வழிந்திருந்தது
என் கண்மணியின் விழிகளில்...
"சென்று வா... என் கண்ணே!" என்று
செவ்வானிலே பறக்க விட்டேன்
"மேக குவியல்களுக்கிடையே
மெதுவாய் செல்லடி!
கடும்பாறை நிறைந்த மலை உச்சியிலே
கழுக்கிருப்பான் கவனம் கொள்ளடி!
வேங்கையாம் சிங்கம் உடன் பதுங்கி பாயும் புலி
வேடுவர் கூட்டமிருக்கும் பார்த்தடி கண்மணியே!!"
விட்டு சென்றவளுக்காக
விழியில் நீர் கசிந்தேன்...
பல இரவும் பொழுதும்
கடந்தோடிப் போனது
பனி நிறைந்த நாளன்று
காலைப் பொழுதினிலே
படுக்கையிலிருந்து எழுந்ததும்
காதில் விழுந்தது ஓர் அழகிய குரல்
என் வீட்டைப் பல நாள் அலங்கரித்த குரல்
மீண்டும் என் இதயத்தை நனைத்தது...
எழுந்து தாழிட்ட ஜன்னல்களைத் திறந்தேன்
"என்னாயிற்றடி!" என்றள்ளியணைத்தேன்
வர்ண விளையாட்டில்லா ஓவியமாய்
வாடியிருந்த அவள் கண்கள் ஒளியிழந்திருந்தது
ஏனிந்த வாட்டம் என்ற கேள்வியை முன்வைத்தேன்.
கண்ணீர் துளி
கடந்து வழிந்தோடி வந்தது அவளிடமிருந்து...
"இவ்வையம் முழுதும் பறந்தேன்;
இன்னல்களே எங்கும் சுழல கண்டேன்
அய்யோ! இனவெறியாட்டம் நிறைந்த
அரபியக் கண்டத்தை கடந்தேன்...
அங்கு திராட்சை தோட்டங்களில்லை!
அமைதி நிலவும் வாழ்வுமில்லை!
கருப்புடையில் சுற்றித் திரியும் பெண் வண்டுகளின்
கற்பு கேள்வி குறியானது வெள்ளை நாகங்களால்...
எலும்புகளும் சதைகளுமாய்
எண்ணிலடங்கா சடலங்கள்!"
குருதி குளமாய் மாறிப் போனது உலகம்!
குணம் மனம் உணர்ந்து
ஆதிமனிதன் வளர்ந்துயர்ந்த
ஆப்பிரிக்க கண்டம் நிலை கண்டு உருகியே போனேன்!
ஒருவேளை சோறின்றி சோர்வாய் போன
ஒன்றுமறியா மக்களின் உடல்...
வஞ்சகர்க்கு சோதனை களமானது!
நாகரீக வளர்ச்சியென்ற போர்வையில்
நாம் யார் என்ற எண்ணமிழந்து
நாளும் குழப்பஸ் சேற்றில் தத்தளித்து
நன்மை மறந்து நடமாடும் மேற்கத்திய மக்களை வெறுத்தேன்!
இயற்கையினை மதியாது
இன்றைய மனிதன் போடும் ஆட்டங்கள்...
இறைவனே நேரில் இறங்கி வந்தாலும்
இடைவேளை கேட்டுத் தப்பித்து செல்வானவன்!
உலகை ரசிக்கும் எண்ணத்தை
உடனே களைந்தேன்!
உயிரினை பாதுகாத்து
உற்றவர்! ப்ரியர்!
உங்கள் கரம் பற்றி வாழ்வதே
உன்னதமென்று நினைவில் கொண்டு
உங்களை அடைந்தேன்!
என் உதடுகள் உதிர்த்த புன்னகை
என் கண்மணிக்கு நானளித்த விடை
வாட்டங்களையெல்லாம் களைந்து
விரைந்து சிறகடித்து என் தோள் சேர்ந்தாள்!
-'கவிதை குளமதில் மீண்டும் ஓர் கல்' என்ற என் முதல் கவிதை புத்தகதிலிருந்து ஓர் கவிதை.
No comments:
Post a Comment