"டேய் நடராஜா... போய் அது என்ன வகைன்னு பாத்துட்டு வாடா! சீக்கிரம்!" என்ற மெலிதாய் ஒரு குரல். "சரி முத்து அண்ணா!" என்று படபடவென வயல்வரப்பு வழி ஓடி சென்றான் நடராஜன். வேலிகளை தாண்டி அவன் நேராக அருகில் உள்ள முனியன் வயலருகே சென்றான். அங்கே வண்டியிலிருந்து மூட்டைகள் இறக்கி வைக்கப்பட்டு கொண்டிருந்தன. அங்குள்ள ஓர் மரத்தின் பின் நின்று இதை கவனித்து கொண்டிருந்தான் நடராஜன். யாரோ பார்ப்பதாய் உணர்ந்த முனியன் திரும்பி பார்க்க, அங்கு ஒரு மரத்தின் பின் நடராஜனை கண்டார். "டேய் ராசா! வாடா! ஏன் அங்கேயே நின்னுட்டே? வா!" என்று முகமெங்கும் புன்னகை மலர்ந்து அழைத்தார் முனியன். நடராஜன் மெதுவாய் அன்ன நடை அழகி போல் நடந்து வந்து முனியன் முன் நின்றான். "ஏன்டா ராசா ஒளிஞ்சு நின்னு பாக்குற?" என்ற கேள்விக்கு அசட்டுத்தனமாய் சிரித்துவிட்டு திரும்பி பார்த்தான். அங்கே முத்து அண்ணன் நின்று கொண்டு, கண்களை உருட்டிக் கொண்டிருந்தான். நெற்றி சுருங்கின, புருவங்கள் கூர்மையான அரிவாள் போலானது! சட்டென்று திரும்பி, "இல்லன்னா... சும்மாதான் வந்தேன்!" என்று மறுபடியும் குழைந்து சிரித்தான். சுற்றியும் பார்த்தான். அந்த மூட்டைகள் அங்கே இருந்த ஓர் குடிலுக்குள் சென்று கொண்டிருந்தது. முனியன் கணக்கு புத்தகம் பார்த்துக் கொண்டிருந்தார். அந்த குடிலின் முன்னே தண்ணீர் பானை இருந்தது. அதை பார்த்த நடராஜன், முனியனை பார்த்து, "அண்ணே தண்ணி குடிச்சிக்கிறேன்..." என்று ஒரு இழுவையை போட்டான். "ம்.. போடா, போய் குடிச்சிக்கோ!" என்று சொல்லிவிட்டு மீண்டும் கணக்கு புத்தகத்தினுள் சென்றார்.
நடராஜன் மெதுவாய் நடந்து சென்று, தண்ணீர் குடிப்பது போல அந்த மூட்டைகளை கவனித்தான். மூட்டைகள் அடுக்கி வைத்து கொண்டிருந்தனர் வேலையாட்கள். அதில் எழுதியிருப்பதை மேய்ந்தது நடராஜனின் கண்கள். டம்ளரை வைத்து விட்டு, "வர்றேன் அண்ணே!" என்று சிரிப்புடன் சிட்டாய் பறந்தான். அவனை பார்த்து "கிறுக்கு பைய!" என்று சொல்லி சிரித்துவிட்டு தன் வேலையை கவனிக்கலானார் முனியன். குறுகிய வயல் வரப்பு வழி ஓடி அருகிலுள்ள முத்துவின் வயலை அடைந்தான்.
"என்னடா? என்னாச்சு?" என்று முட்டை கண்களுடன் நின்றிருந்தான் முத்து. நடராஜன் அங்கே பார்த்த அந்த மூட்டையின் விவரத்தை முத்துவிடம் சொன்னான். அதுவரை அவன் முகத்திலிருந்த பதற்றம் மாறி புன்னகை சிந்தினான். ஒரு வெள்ளை காகித்ததில் நடராஜன் சொல்வதை எழுதிக் கொண்டான். "இதயே ஒரு 20 மூட்டை வாங்கீட்டா, நம்ம வயலுக்கும் தெளிச்சிடலாம் ராசா!" என்று கொக்கரித்து சிரித்தான் முத்து. அதை கண்டு செய்வதறியாது நடராஜனும் சிரிக்க ஆரம்பித்தான்.
அப்போது யாரோ கடினப்பட்டு இருமும் சத்தம் கேட்டது. நடராஜனும் முத்துவும் திரும்பி பார்த்தனர். முத்துவின் தந்தை துரைசாமி அய்யா வந்து கொண்டிருந்தார். "என்னங்கடா களவாணி பயலுகளா... என்ன நடக்குது? ஒரே சிரிப்பு சத்தமா இருக்கு!" என்று வினவ, நாய் கடி வாங்கியவர்கள் போல் நின்றனர் நடராஜனும் முத்துவும். "இல்லப்பா... சும்மாதான்..." என்று முத்து இழுத்துக் கொண்டிருக்க, தன் சுருங்கிய கண்களின் மேல் கையை குடையாக்கி பக்கத்து வயலை கவனித்தார் அய்யா. அங்கே முனியன் வயலருகே நடக்கும் வேலையை கவனித்தார் அவர். திரும்பி முத்துவையும் நடராஜனையும் பார்த்தார். இருவரும் தலை குனிந்தனர்.
உற்றுப் பார்த்தார் அய்யா. தலை நிமிர முடியாமல் தரை கவனித்தனர் இருவர். "களவாணிங்கன்னு சொன்னது சரியாத்தான் போச்சு! முனியன் தோப்புல என்ன உரம் போடுறான்னு திருட்டுதனமா பாக்க வந்திருக்கீங்க? அப்படிதான?" என்று கடுகடுவென பேசிய அய்யாவிற்கு பதிலளிக்க முடியாமல் நின்றனர் இருவர். "ஒன்னு புரிஞ்சிகுங்கடா... அவன் மண்ணு வேற, நம்மளது வேற! அவன் அவனோட மண்ண பாத்து உரம் போடுறான். அதனால அவனுக்கு விளைச்சல் அதிகம்! நீ அது தெரியாம, எப்பவும் அவன் தோப்புல தொரவுல நடக்குற சமாச்சாரத்த பாத்திக்கிட்டு இருக்க? நீ நல்ல விவசாயின்னா, உன் நிலத்துக்கு என்ன தேவைன்னு பாரு! உன் நிலத்த கவனி! அடுத்தவன் அவன் விசியத்த பாத்துக்குவான். அவன் போட்ட உரமேதான் நான் போடுவேன்னு கங்கனம் கட்டீட்டு போட்டி மனசோட திரிஞ்ச... உன் நிலம் தான் பாழா போகும்! முதல பட்டணம் போய்... ம்ம்ம்... நம்ம மண்னை கொஞ்சம் எடுத்திட்டு போ! அவுங்க சொல்லுவாங்க... நமக்கு எது சரியா வரும்ன்னு! புரிஞ்சிதா?" என்று பொறிந்து தள்ளியவருக்கு சரியென்று சொல்ல தலை நிமிர்ந்தனர் இருவர்.
அப்போது ஒருவன் அவர்களை நோக்கி ஓடி வந்தான். "அய்யா முனியன் அண்ணே அனுப்புனாரு! ஒரு 30 உரம் மூட்டை இருக்கு. அது உங்க வயலுக்குதான் சரியா வருமாமா! பட்டணத்து சந்தையில வாங்கி வந்திருக்காரு. உங்க கிட்ட கேட்டிட்டு வர சொன்னார்..." என்றான் மூச்சிரைக்க. அவனை பார்த்து விட்டு திரும்பி நடராஜனையும் முத்துவையும் பார்த்தார். அந்த வேலையாளை பார்த்து, "சரிப்பா... மூட்டைக்கு எவ்வளோ சொல்றான் முனியன்?" என்ற கேள்விக்கு அந்த வேலையாள் பதிலளித்து விட்டு நின்றான். அய்யா சிரித்தார். ஒரு கும்பிடு வைத்து விட்டு குடுகுடுவென வரப்பு வழி ஓடி சென்றான் அவன். மீண்டும் ஒரு முறை அய்யா திரும்பி நடராஜனையும் முத்துவையும் பார்த்தார். அவர்கள் பேச்சற்று நின்றிருந்தனர். ஒரு சிரிப்புடன் அவர்கள் இருவரையும் மேலிருந்து கீழ் பார்த்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.
- பி சி பாலசுப்பிரமணியம்
No comments:
Post a Comment