"என்னங்க இது? செய்திகள் பார்த்தாலே எல்லாம் ஒரே கேவலமான விஷயங்களா இருக்கு? நாடு இப்பிடி குட்டி சுவரா போயிடுச்சே! எப்போங்க இந்த நாடு திருந்தும்?" என்றார் கவலை தேய்ந்த முகத்துடன் பாலு தாத்தாவின் நண்பர். தன் தாடையை சொறிந்து விட்டு, புருவங்கள் கூர்மையாக்கி நண்பரை பார்த்தார் பாலு தாத்தா.
"எப்பிடிங்க திருந்தும்? நாடு எப்பிடி திருந்தும்? ஒரு நாட்டோட வளர்ச்சி இளைஞர்கள் கையில தான் இருக்குன்னு ஒரு ... ஒரு... அவர் பேர் என்ன... ம்... மறந்திடுச்சு! ஆனா நம்ம இளைஞர்கள் அப்பிடியா இருக்காங்க? எல்லாம் காதல் கத்திரிக்கான்னு காலத்த கடத்திக்கிட்டு இருக்கானுங்க!" என்ற பாலு தாத்தாவின் உரத்த குரலுக்கு செவி மடுத்தார் அவர் நண்பர்.
"வீட்டில பெத்தவங்கள பார்த்துக்க அவுங்களுக்கு நேரமில்ல... பாசம் நேசமெல்லாம் இந்த காலத்துல வெறும் வேஷம் தாங்க!" என்று பாலு தாத்தா மேலும் அடுக்கி கொண்டே போக, அவரது மருமகள் அவருக்கும் அவர் நண்பருக்கு காபி கொண்டு வந்தாள்.
காபி குடித்த படியே "என்னங்க இருக்கு? இந்த காலத்து வயசானவங்களுக்கு? நாமெல்லாம் நம்ம அம்மா அப்பாவை எப்பிடி கவனிச்சிருப்போம்... அதெல்லாம் இந்த காலத்து பசங்களுக்கு சொன்னா புரியாதுங்க!" என்று பேச்சு நீண்டு கொண்டே இருந்தது.
"டேய் ராமு! எந்திரி! விளையாடின வரைக்கும் போதும்! போய் ரெடியாகு... ஸ்விம்மிங் கிளாசுக்கு நேரமாச்சு." என்று விளையாடி கொண்டிருந்த தன் மகனை தயார்படுத்தி, தானும் அலுவலகம் செல்ல தயாரானாள்.
"என்னங்க சினிமா எடுக்கறாங்க? அந்த காலத்து நடிகர் நடிகைகளுக்கு கிட்ட வர முடியுமாங்க இப்போ இருக்குற பொடுசுங்க எல்லாம்? எல்லாம் காசுங்க! சினிமா துறையே குப்பையாகி போச்சு. நல்ல சினிமாவே இல்ல! எல்லாம் நம்ம வாழ்ந்த காலத்தோடு முடிஞ்சு போச்சு!" என்று பாலு தாத்தா பேசி கொண்டு இருக்கையில் அவரது ஒரே மகன் வாசு, அலுவலகம் செல்லும் வேஷத்திலேயே அங்காடிக்கு சென்று காய்கறிகள் வாங்கி வந்திருந்தார். "வணக்கமுங்க!" என்று தன் அப்பாவுடன் அமர்ந்திருந்தவரிடம் சிரித்து விட்டு, "மாலினி... ரெடியா? டைம் ஆச்சுமா!" என்று கூற, "இதோ வந்துட்டேங்க!" என்று பதில் வந்தது.
"அப்பா உங்களுக்கு இன்ஜெக்ஷன் போட்ரலாமா?" என்று மகன் கேட்க, தொடர்ந்து சினிமா வளர்ச்சி பற்றி பேசி கொண்டிருந்த அவருக்கு அமைதியாய் மனதிற்குள் சிரித்தபடியே தேவையான மருந்தை ஊசி மூலம் செலுத்தினார் வாசு.
"ரெடிங்க! டிபன் ரெடி! சாப்பிடலாம். மாமா வாங்க! ஐயா நீங்களும் வாங்க!" என்றாள் மருமகள். "இல்லம்மா! பரவாயில்ல. நான் என் வீட்டுக்கு போய் சாப்பிடறேன்." என்றவரை விடாமல் பிடித்து அழைத்து வந்தார் பாலு தாத்தா. "வாங்க சார்! சாப்பிடுங்க! நம்ம காலத்துல சமைக்கும் போது எல்லாம் நம்ம வீட்டு பொம்பளைங்க அவுங்க கைப்பட எல்லாத்தையும் அரைச்சு சமச்சாங்க. கறி கொழம்பு வெச்சா அந்த வீதியே மணக்கும்! ஹம்! அது ஒரு காலமுங்க..." என்று மேஜை மீது அமர்ந்தனர் எல்லோரும். மருமகள் பரிமாறினாள். அப்போது பாலு தாத்தாவின் நெற்றியிலிருந்து வியர்வை வழிந்தோடியது. அதை பார்த்த வாசு, அவர் மனைவியை பார்த்து செய்கையாலேயே குளிர் சாதன பெட்டியை போட சொன்னார். "சார்! ரொம்ப வேகுதுல்ல? ஏம்மா..." என்று பாலு தாத்தா வாயை திறக்கும் முன்னரே குளிர் காற்று அவர் கண்களை வருடியது. மீண்டும் சாப்பிட ஆரம்பித்தனர். "காரம் தாங்க ஒரு சமையலுக்கு முக்கியம்! என்ன சொல்றீங்க?" என்று தன் நண்பரிடம் பாலு தாத்தா வினவ, அவரும் தெளிவாக தலையாட்டினார்.
“என்ன செஞ்சாலும், இப்போ இவ்வளோ அதி நவீன பொருட்கள் வந்தும் அந்த காலத்து சமையலுக்கு ஈடுக்கொடுக்க முடியல பாருங்க!" என்று பாலு தாத்தா மேலும் அடுக்கி கொண்டே போக, ஓர பார்வையில் தன் மனைவியை பார்த்தார் வாசு. வாசுவையே பார்த்து கொண்டிருந்தார் அவர் மனைவி.
'ஒண்ணுமில்ல! கவலைப்படாதே!' என்று கண்களால் அவர் சொன்ன ஆறுதல் அவளை புன்னகைக்க செய்தது. மீண்டும் தன் பழம்பெருமைகளை தானே பறைசாற்றிக் கொண்டிருந்தார் பாலு தாத்தா. அப்போது பாலு தாத்தாவின் பேரன், "அம்மா, எனக்கு இன்னொரு சப்பாத்தி. நல்லா இருக்கும்மா..." என்று தன் விரல்களை நக்கியபடியே அம்மாவை பார்த்தான், வெகுளியாக. அது வரை கடகடவென தன் பேச்சாற்றலால் வானம் தொட்டதாய் நினைத்த பாலு தாத்தா, பூமி அடைந்தார், அவர் நண்பரோடு.
- பி.சி.பாலசுப்பிரமணியம்
No comments:
Post a Comment