Saturday, May 7, 2011

தலைப்பு என்னவாக இருக்கும்? என்னவாக இருக்கலாம்!

நகர வாசிக்கு

சிற்றின்பத்திற்கான

ஒரு சாவியே அவள்!


அவள் எல்லை நாம் தொடும் முன்

அவள் ஸ்பரிசம் நம்மை வருடிடும்...


அவளின் தரிசனம்! – உடனே

வேண்டும் இக்கனம்!

என்றும் கங்கணம்கட்டி

நிற்கும் உடல்கள் ஏராளம்!


விடுமுறைகளில்,

வெயில் கொளுத்தும்

கடும் கோடை விதி முறைகளில்

அவள் நம் மனதினுள் புகுந்து

காது மடலோரம் சொல்வாள்,

“இன்னும் என்னை காண வராததன்

காரணம் என்னவோ?” என்று!


காடு புகுந்தாலே

காட்சி தருவாள்!

அதற்கு முனிவனாக தேவையில்லை!


தூய காற்று மட்டுமே

அவளை சுற்றிலும்

அய்யம் வேண்டாம்...

தூய்மையானவளே அவள்!


மனிதன் அல்லாதவைகளுக்கும்

இல்லை என்று சொல்லாமல்

தன்னுடன் இருக்க செய்வாள்!


காலை வான் மகன்

போடும் சொடுக்களுக்கு

அவள் இஷ்டம் போல் நாட்டியமிடுவாள்;

ஆடிய களைப்பால்

அவள் அங்கமெங்கும்

விய்ர்வை துளிகள் உதிர்க்கும்

‘அது ஓர் அழகிய நறுமணம்!’

என்று முந்தியடித்தபடி

நுகர வரும் கூட்டம் அதிகம்!


அவள் முன்...

யாரும் பெரிதுமில்லை!

யாரும் சிறிதுமில்லை!


அவள் கண்பார்வை படும் வரையில் தான்

மைனர் வீட்டு கோமகன்!

பட்டுவிட்டாலோ...

மையிடும் அவள்

விரல் காட்டும் திசையில்... கோமகன்

தவழும் மழலை செல்வன்!


அவள் மடியில்

எவர் சேர்ந்தாலும்

நான்கு கால்களால்

நடைபழகும்

குழந்தை தான்!


‘இல்லை!

நான் மழலை அல்ல!’

என்று வீம்பளக்கும் சில்மிஷர்களுக்கு

பாசம் காட்டி விழ செய்வாள்!

விழுந்தவன் விழிப்பான்!

சுற்றியும் பார்ப்பான்!

ஏற்கனவே இதே வீழ்ச்சி கண்ட

அம்மாஞ்சிகள் – ஒன்றுமே நடவாதவாறு

எங்கும் நின்று

எள்ளி நகையாடுவர்!

வீழ்ந்தவன் எழுவான்...

பின் தொழுவான்...

‘அழகி உன்

கரங்கள் கீழ்

நான் ஒன்றும் பெரியவன் அல்ல!

எல்லோர் போல்

நானும் ஓர் மழலை தான்...’

என்று கூச்சமே இல்லாமல்

அசடும் வழிவான்


குளிர்விப்பாள்!

மகிழ்விப்பாள்!

அகம் நிறைய

சிரிக்க வைப்பாள்!

மனிதன் ஜனித்த பாதையை

மனிதனுக்கே நினைவூட்டிடுவாள்!


அவளை பிரிந்து

தொலை தூரம் போன பின்பு,

ஒரு கனம்...

திரும்பி நின்று எட்டி பார்க்க செய்வாள்!

‘நம் பின்னால் அவள் வர மாட்டாளா...’

என்று நம்மை ஏங்கவும் வைப்பாள்....


அழகில் சிறந்தவள்

பொலிவுடன் என்றும் மிளிர்பவள்

அந்த உயர்ந்த இடத்திலே தான் இருப்பாள்!

தலைக்கனக்காது...

தன் கீழ் இருக்கும் ஜன தலைகளை நனைத்து!

- அருவி!

- பி.சி.பாலசுப்பிரமணியம்

பொன்னான மொழி!

அஞ்சாதே!
மீறினால்...
எஞ்சமாட்டாய்!

விடியல்

அதிகாலை நேரம். நாளிதழ் ஒன்று வேகமாய் வீட்டின் உள்ள பறந்தோடி வந்தது. அதே வேகத்தில் வீட்டிலிருந்து வெளியே வந்து, அந்த நாளிதழை எடுத்து, வீட்டு வாசற்படியிலேயே அமர்ந்து புரட்டிலானார் வேலு. அந்த வீட்டின் வெளியே கோலம் போட்டும் பணியில் மும்முரமாய் இருந்தார் அமிர்தம். அப்போது அமிர்தம் மீது ஒரு நிழல் படர்ந்தது. தலை நிமிர்ந்து பார்த்தார்.

“டேய்! சுரேஷ் வந்துட்டியா!” என்று சிரித்து விட்டு, பின்னால் திரும்பி, “என்னங்க... வந்துட்டான்!” என்று அவன் கைகள் பற்றி சிறு பிள்ளை போல் அவனை வீட்டின் உள்ளே அழைத்து வந்தார் அமிர்தம். படித்து கொண்டிருந்த நாளிதழை ஓரமாய் வைத்து விட்டு எழுந்தார் வேலு, முகத்தில் அழகிய புன்னகையுடன்! “அப்பா!” என்று சுரேஷ் முகமும் மலர்ந்தது.

“வாடா! பிரயாணம் எல்லாம் சவுகரியமா இருந்துச்சா?” என்று அப்பா கேட்க, “நல்லாயிருந்துச்சுப்பா! ஒன்னும் பிரச்சனை இல்ல!” என்றான் சுரேஷ். இருவரும் பேசி கொண்டிருக்கையில், “இந்தாடா காபி!” என்று டம்ளரை துடைத்த படி கொண்டு வந்தாள் அம்மா. “ஒடம்பு இளைச்சிடுச்சி... ஒன்னும் சாப்பிடறது இல்ல போல் இருக்கு! அங்கே நம்ம ஊர் சாப்பாடு கிடைக்கும் தானே என்கிட்டே சொல்லியிருந்த, அப்புறம்...” என்று அம்மா கடகடவென தன் அக்கறை கலந்த பேச்சை தொடங்கினாள். “அமிர்தம்! அவனே இப்ப தான் வந்திருக்கான்!” என்று மனைவியை பார்த்தார் வேலு. “போ! போய் தண்ணி சூடு பண்ணுமா” என்றார். அம்மாவும் சிரித்த படி, சரிதானே என்பது போல் தன் பின் மண்டையில் தானே அடித்த படி உள்ளே ஓடினார்.

“அப்புறம் டா! வேலை எல்லாம் எப்பிடி இருக்கு?” என்று அப்பா கேட்க, “இப்போ பதவி உயர்வு வந்திருக்குப்பா. ஆராய்ச்சி விஞ்ஞானிலயிருந்து இப்போ முதன்மை ஆராய்ச்சி விஞ்ஞானி பதவி கொடுத்திருக்காங்க. ஒரு மாசம் லீவு... அதான் வந்துட்டேன்.” என்றான் சுரேஷ். “சரி... புதுசா ஏதும் ராக்கெட் விடலையா உங்க ஆளுங்க...” என்று மெல்லிய சிரிப்புடன், கண்ணாடியின் மேல் புறம் வழி பார்த்தார் அப்பா. அப்பாவின் நக்கல் உணர்ந்த சுரேஷ் சிரித்தபடி, “இல்ல... இந்த வருஷம் ‘நாசா’ மையத்தில இருந்து எந்த விண்வெளி பயணமும் இல்ல. இப்ப ஒரு பிளான் போயிட்டிருக்குப்பா. அடுத்த வருஷம் அநேகமா தயார் ஆயிடலாம்!” என்று பதிலளித்தான் சுரேஷ். ஏதோ சிந்தனை தன்னை உரசிய வேகத்தில், “சரிப்பா! கார்த்திக் எங்கே?” என்று சுரேஷின் கண்கள் அங்குமிங்கும் துழாவியபடி, “வந்ததுலருந்து ஆளே காணோம்...” என்றான் சுரேஷ்.

அது வரை மலர்ந்திருந்த அப்பா முகம் சட்டென புன்னகை இழந்தது. “இந்நேரம் அவன் மைதானத்தில தானே இருப்பான்! நான் அவனை அங்கே போய் பாத்துக்கிறேன்.” என்று சுரேஷ் எழுந்தான். “டேய் டேய்! இருடா... அவன் மைதானத்தில எல்லாம் இருக்கமாட்டான்... இப்போ கனவுலகத்துல தான் இப்ப இருப்பாரு.... ஐயா!” என்று கடுகடுத்து கொண்டார் அப்பா. ஒன்றும் புரியாமல் நின்றிருந்த சுரேஷை பார்த்து, “போ.. போய் உள்ள பாரு!” என்றார் அப்பா. சுரேஷ் வீட்டின் உள்ளே சென்றான். அவன் பின்னால் அப்பாவும்... கார்த்திக் இருக்கும் அறையினுள் நுழைந்தனர் இருவரும். போர்வையினுள் சுருண்டு கொண்டு கால் எது தலை எது என்பது கூட வெளியே தெரியாத அளவிற்கு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான் கார்த்திக். கடிகாரத்தில் 9 மணி காட்டி கொண்டிருந்தது.

“அப்ப இன்னைக்கு இவன் பயிற்சிக்கு போகலையா?” என்று சுரேஷ் வினவ, “யாரு? இவரா? இவரு என்னைக்குமே போறதில்ல...” என்றார் அப்பா. “என்னப்பா சொல்றீங்க? எப்பவுமே காலையில நேரமா எந்திரிச்சு, கிரவுண்டுக்கு போய் பயற்சி முடிச்சிட்டு தானே வீட்டுக்கே வருவான். அந்த டைம்ல தானே அவனுக்கு பயிற்சி கொடுக்க ஆளுங்களும் இருப்பாங்க! இப்போ.... இவன் இப்படி தூங்கிட்டு இருக்கான்!” என்றான் சுரேஷ். அதற்கு அப்பா, “ஆமா! அப்பிடி தான் இருந்தான். போன வருஷம் மார்கழி குளிரை ருசி பார்த்துட்டார் ஐயா. அப்புறம் எப்பிடி? அந்த நேரத்துலயும் விடியகாலையில எந்திரிச்சி, கிரவுண்டுக்கு போவான்னு பாத்தா, இதோ அஞ்சு நிமிஷம்! பத்து நிமிஷம், கொஞ்ச நேரம் தூங்கிக்கிறேன்ன்னு இப்ப வரைக்கும் காலத்த ஓட்டிட்டான்” என்று சலிப்பாய் பதிலளித்தார். சிறிது நேரம் யோசித்த படி, “சரி வாங்க!” என்று அப்பாவை அழைத்து கொண்டு அங்கிருந்து வெளியேறினான் சுரேஷ்.

காலை 12 மணி. மிகுந்த களைப்புடன் அறையை விட்டு வெளியே வந்தான் கார்த்திக், கையில் கைபேசியுடன்! அப்படியே வந்து ஹாலில் உள்ள இருக்கையில் அமர்ந்தான். விரல்கள் கைபேசியின் மேல் வேகமாய் விளையாடி கொண்டிருந்தது. அப்போது யாரோ தன்னை பார்ப்பதாய் உணர்ந்தான் கார்த்திக். தலை நிமிர்ந்து பார்த்தான். அவன் எதிரில் அவன் அண்ணா. சிரித்தபடி, “எப்ப வந்தடா அண்ணா!” என்று கைபேசியை ஓரமாய் வைத்து விட்டு அண்ணனின் அருகே ஓடி சென்று அமர்ந்தான் கார்த்திக். சுரேஷ் சிரித்தபடி, “இன்னைக்கு காலையில தான். 6 மணியிருக்கும்.” என்றான். “ஒ! நான் தூங்கிட்டு இருந்திருப்பேன்.. அதான்” என்றான் கார்த்திக். அப்போது அப்பா, “அனந்தசயனம் முடிஞ்சுதா துரை!” என்றபடி அறையினுள் நுழைந்தார். “இப்பதான் விடிஞ்சிருக்கு ஐயாவுக்கு!” என்று நக்கல் அடித்து கொண்டே வந்தார் அப்பா. “நைட் நிறைய படிக்க வேண்டி இருந்துச்சு! அதான்...” என்று இழுத்தான் கார்த்திக். “ராத்திரி எட்டு மணிக்கெல்லாம் உன் ரூம் தான் கும்மிருட்டில இருந்துச்சே... ” என்று அப்பா விடாமல் மகனுக்கு தூண்டில் போட, கோபத்துடன், “சும்மா தொன தொனன்னு! நச்சரிக்காதப்பா!” என்றான் கார்த்திக். “யாருடா தொன தொனன்னு நச்சரிக்கிறது. நானா? நீயா? விடிய காலையில நேராம எந்திரிக்க முடியல... அண்ணன் வந்திருக்கான்! அவன் வந்து எத்தனை நேரம் ஆச்சு! நீ இப்ப தான் எந்திரிச்சு வர்ற... பெருசா வெட்டி முறிச்சவன் மாதிரி. இதுல பேச்சு வேற...இப்படி இருந்தே... எத்தனை வருஷமானாலும் உன்னால ஸ்டேட் டீம்ல சேர முடியாது!” என்று அப்பா புலம்பி தீர்த்து கொண்டிருந்தார். கார்த்திக்கின் முகம் சிவப்பானது. சத்தம் கேட்டு அம்மாவும் சமையலறையிலிருந்து ஓடி வந்தார். சுரேஷ் அப்பாவை நோக்கி, “அப்பா!” என்று கூப்பிட்டான். அப்பா விடாமல், “உன் அண்ணனை பாருடா. நல்லா படிச்சு, இப்ப நல்ல வேலையில இருக்கான்! காரணம் நல்ல பழக்கங்கள்! காலையில நேரமா எந்திரிச்சு, உடற்பயிற்சி செஞ்சு, படிச்சு, வீட்டுல ஏதாவது உதவி பண்ணி... அப்பிடி தான்டா இருக்கணும் பசங்கன்னா... நீயும் இருக்கியே....” என்று அவர் மேலும் பொறிந்து தள்ள, கார்த்திக் கண்களில் கண்ணீர் தேங்கியது. அண்ணனை பார்த்தான். அண்ணனோ என்ன சொல்வது என்று தெரியாமல், “டேய் கார்த்தி!” என்று தம்பியை பார்த்து சொல்ல, வெடுக்கென எழுந்து, “நிம்மதியே இல்ல இந்த வீட்டில! கொஞ்சம் நேரம் தூங்கினா, என்னென்ன பேச்சு கேட்க வேண்டியிருக்கு!” என்றபடி, அங்கிருந்து வெளியே சென்றான்.

“பாத்தியா! பாத்தியாடா சுரேஷ். ரெண்டு வார்த்தை சொன்னா எப்பிடி கோபம் வருது பாரு அவனுக்கு!” என்று அப்பா கோபம் கொள்ள, சுரேஷ் அப்பாவின் கரங்களை பற்றி, “அப்பா! நீங்க அமைதியா இருங்க! முதல்ல அட்வைஸ் பண்ணாதீங்க. அப்புறம்... கம்பேர் பண்ணாதீங்கப்பா! அது ரொம்ப தப்பு! அதனால அவனுக்கு உங்க மேல மட்டும் இல்ல, என் மேலையும் வெறுப்பு தான் வரும்!” என்று சொல்லி முடிக்க, “அவனுக்கு அப்பிடியாவது மண்டையில ஏறுதான்னு பாக்குறேன்டா!” என்றார் அப்பா. “இல்லப்பா! இது சாதாரணமா சரி செய்ய கூடிய விஷயம். நீங்க கோபப்பட்டு, அவனை திட்டி தீர்க்கறதுனால ஒரு பயனும் இல்ல.” என்றான் சுரேஷ். “இவனை என்னதான் பண்றது? இப்படியே விட்ற சொல்றியா?” என்று அப்பாவின் கேள்விக்கு, அவர் கண்களை பார்த்து, “அவனுக்கு தேவை ஒரு தூண்டுகோல்! ஒரு கேண்டில்ப்பா!” என்றான் சுரேஷ். அப்பா சற்று மௌனமானார். “நான் பாத்துக்குறேன்ப்பா! இந்த ஒரு மாசம் லீவு இருக்கு. அவனை நான் சரி செஞ்சிட்டு தான் போவேன்!” என்று அப்பாவின் கரங்களை தட்டி கொடுத்தான் சுரேஷ்.

அடுத்த நாள் அதிகாலை 5 மணி. கடிகாரம் மணியோசையுடன் எழுந்தது. உடன் திடுக்கிட்டு எழுந்தான் கார்த்திக். அவன் அருகில் அவன் அண்ணன் சுரேஷ், தலைமுடி வாரி கொண்டிருந்தான். திரும்பி கடிகாரத்தை பார்த்து “சரியா வேலை செய்யுதான்னு பார்த்தேன்!” என்று கடிகாரத்தை அணைத்து விட்டு தம்பியை பார்த்தான் சுரேஷ். கார்த்திக் முழித்தான். “வேலை செய்யுது!” என்று மெலிதாய் சிரித்தான் சுரேஷ். மறுபடியும் படுக்கையில் உறங்க கண்கள் அயர்ந்து வளைந்தான் கார்த்திக். “டேய்! டேய்! எந்திரி!” என்று உறங்க சென்றவனை எழுப்பி, அவனுக்காக செய்து வைத்திருந்த சூடான காபியை டம்ளரில் ஊற்றி கொடுத்தான் சுரேஷ். “இதை குடிச்சிட்டு கிளம்பு!” என்றான் சுரேஷ். “எங்க?” என்று குடித்தபடி கேள்வி கேட்டான் கார்த்திக். “ம்... கிரவுண்டுக்கு! இன்னைக்கு நானும் உன் கூட வர்றேன்!” என்றான் சுரேஷ். போர்வையை தூக்கி எறிந்துவிட்டு, படபடவென தயாரானான் கார்த்திக். அண்ணனும் தம்பியும் ஒன்றாய் இரு சக்கர வாகனமேறி கிளம்பினர். சிரித்தபடி அம்மா கை அசைத்து வழி அனுப்பினாள். கார்த்திக் சிரித்தபடி திரும்பி அப்பாவை ஒரு பார்வை பார்த்தான். அப்பா பெரிதாய் அலட்டி கொள்ளாமல் செடிகளுக்கு நீர் ஊற்றி கொண்டிருந்தார். கார்த்திக் வெடுக்கென திரும்பி கொண்டான். இதை வண்டியின் கண்ணாடி வழி கவனித்த சுரேஷ், திரும்பி அப்பாவை பார்க்க, அவர் சிரிப்புடன் கை அசைத்து காட்டினார். அண்ணன் யாரை பார்க்கிறான் என்று சட்டென திரும்பி பார்த்தான் கார்த்திக். அங்கு அவன் அப்பா கை அசைத்து கொண்டிருந்தார். கார்த்திக் ஒரு நக்கல் சிரிப்பு சிரிக்க, அப்பா கொசு அடிப்பது போல் தன் கை அசைவுகளை மாற்றி அசடு வழிந்தார்.

சுரேஷும் கார்த்திக்கும் மைதானம் சென்றனர். கார்த்திக் தன் வழக்கமான பயிற்சிகளில் இறங்கினான். சுரேஷ் அந்த மைதானத்தை சுற்றி ஒடலானான். இருவரும் பயிற்சி முடிந்து ஒன்றாய் அங்கிருக்கும் தேநீரகம் ஒன்றில் சுட சுட தேநீர் பருகி, அந்த காலை வேலை குளிரை ரசித்தனர். அருகில் இருக்கும் பெட்டி கடையிலிருந்து நாளிதழ் ஒன்றை வாங்கி இருவரும் படித்தனர். வெகு நேரம் அண்ணனும் தம்பியும் பல விஷயங்கள் பற்றி உரையாடி கொண்டிருந்தனர். கார்த்திக் என்றும் இல்லாத புத்துணர்ச்சியை அன்று, அந்த நொடியில் உணர்ந்தான். அன்றிலிருந்து தினமும் இது வழக்கமானது. அப்பாவும் அம்மாவும் மகிழ்ந்தனர். கார்த்திக் முன்பிருந்த சோம்பலின் பிடியிலிருந்து வெளியே வந்தான்.

ஒரு நாள் அதிகாலை, தேநீரகம் ஒன்றின் வெளியே, சுரேஷ் தன் தம்பியை பார்த்து, “கார்த்திக்!” என்று அழைத்தான். “ம்....சொல்லு ” என்று பயிற்சி முடிந்த பசியில் கையிலிருந்த பிஸ்கட்டுகளை வேகமாய் வாயினுள் தள்ளி கொண்டிருந்தான் கார்த்திக். “இனி நீதான் உன்ன பாத்துக்கனும்டா!” என்றான் சுரேஷ். சாப்பிட்டு கொண்டிருந்த கார்த்திக், சட்டென நிறுத்தினான். “ஆமா! நான் நாளைக்கு மதியம் கிளம்புறேன்.”, என்ற சுரேஷ் சொல்ல, தெரியும் என்பது போல் கார்த்திக் தலை அசைத்தான். “நான் போனதுக்கு அப்புறம் நீ மறுபடியும் பழைய படி ஆக கூடாது! நீ கண்டிப்பா நம்ம ஸ்டேட் கிரிக்கெட் டீம்ல வருவேன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு! எனக்கு மட்டுமில்ல, நம்ம அப்பா அம்மா, உன் நண்பர்கள்! எல்லாத்துக்கும் தான்” என்று அண்ணன் சொல்ல, கார்த்திக் முகத்தில் மகிழ்ச்சி. “ஆனா! நீ செலக்ட் ஆகுறதும் ஆகாததும் இப்ப உன் கையில தான் இருக்கு!” என்று மீண்டும் அண்ணன் ஒரு புதிர் போட்டான். ஒன்றும் புரியாத தொனியில் கார்த்திக் முழிக்க, “ஒண்ணுமில்ல! இந்த ஒரு மாசம் நான் உன் கூட இருந்தேன்! உனக்கு ஒரு கம்பெனி இருந்துச்சு! பயிற்சி எல்லாம் சரியா போச்சு. உன் பயிற்சியாளர் கூட உன் மேல ரொம்ப நம்பிக்கை வெச்சிருக்காரு. இப்ப நான் இல்லைன்னு நீ பழையபடி வீட்டில தூங்கிட்டு இருக்க கூடாது! நாளையில இருந்து தான் உன்னோட நிஜமான பயிற்சி ஆரம்பம்! புரிஞ்சுதா?” என்று சுரேஷ் கார்த்திக்கின் தோளை தட்டி கொடுத்தான். கார்த்திக்கும் அதை கவனமாக கேட்டு கொண்டான்.

அடுத்த நாள் காலை 8 மணி. “இந்தாடா காபி!” என்று காபியுடன் வந்து அம்மா சுரேஷை எழுப்பி விட்டாள். படுக்கையிலிருந்து எழுந்து காபி குடித்தப்படியே கடிகாரம் பார்த்தான். நேரம் 8 மணி. திரும்பி தம்பி உறங்கும் படுக்கையை பார்த்தான். அது தலை முதல் பாதம் வரை போர்வையால் மூடப்பட்டு இருந்தது. சட்டென சுரேஷ் “அப்பா... அப்பா! கார்த்தி இன்னைக்கு பயிற்சிக்கு போயிட்டானாப்பா?” என்று கூவினான். அப்பா அந்த அறையினுள் வந்து, “இல்லன்னு நினைக்குறேன்! பைக் கூட இங்க தான் இருக்கு! நீ இன்னைக்கு கிளம்பிற இல்ல! அவ்வளோதான்! 29 நாள் சரியா போனான். இன்னைக்கு ஆள் இல்ல, மறுபடியும் வேதாளம் முருங்கை மரம் ஏறீடுச்சு!” என்று அப்பா சலித்து கொள்ள, அம்மா அங்கு வந்தார். சுரேஷ் முகம் சூடானது! கொஞ்சம் கோபத்துடன் திரும்பி, கார்த்திக்கின் போர்வையை விலக்கினான். சட்டென மௌனமாகி சிரித்தான். அதில் தலையணைகள் மட்டுமே இருந்தன. அங்கு ஒரு கடிதமும் இருந்தது. அதை பிரித்தான் சுரேஷ். உள்ளே, “ஐ லவ் யூ அண்ணா!” என்று எழுதி, அருகில் புன்னகை சிந்தும் ஒரு உருவத்தை வரைந்து வைத்திருந்தான் கார்த்திக். சுரேஷ் சிரித்தபடி அப்பாவை பார்த்தான். அவர் வழக்கம் போல் தன் காதை சொறிந்து, அசடு வழிய அங்கிருந்து சிரித்தபடியே சென்றார். அம்மா அவரை பார்த்து சிரித்து விட்டு, சுரேஷின் கன்னத்தை செல்லமாக கிள்ளிய படி அவரும் அங்கிருந்து சென்றார். சுரேஷின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை! அகமகிழ்ந்து புன்னகைத்தான்.

அன்று சுரேஷ் கிளம்பும் நேரம், கார்த்திக் வந்தான். சுரேஷ் சிரித்தப்படி, தன் தம்பியை இறுக்கி அணைத்து கன்னத்தில் மெலிதாய் அடித்தான். கார்த்திக்கும் சிரிக்க, அவனுக்கு ஒரு பெட்டியை கையில் கொடுத்தான் சுரேஷ். கார்த்திக் அதை பிரித்து பார்த்தான். அதில் விலை உயர்ந்த காலணிகள் கார்த்திக்கை பார்த்து புன்னகைத்தன. சிரித்தபடி அண்ணனை பார்த்த கார்த்திக், அவனை மேலும் இறுக்க, எலும்பு உடையும் அளவுக்கு அணைத்து கொண்டான்! வலியுடன் சுரேஷ் சிரிக்க, அதை பார்த்து கார்த்திக்கும் சிரித்தான். சிரித்தபடியே அம்மாவும் அப்பாவும் அவர்களை பார்த்து ரசித்து கொண்டிருந்தனர்.

- பி.சி.பாலசுப்பிரமணியம்