Saturday, May 7, 2011

தலைப்பு என்னவாக இருக்கும்? என்னவாக இருக்கலாம்!

நகர வாசிக்கு

சிற்றின்பத்திற்கான

ஒரு சாவியே அவள்!


அவள் எல்லை நாம் தொடும் முன்

அவள் ஸ்பரிசம் நம்மை வருடிடும்...


அவளின் தரிசனம்! – உடனே

வேண்டும் இக்கனம்!

என்றும் கங்கணம்கட்டி

நிற்கும் உடல்கள் ஏராளம்!


விடுமுறைகளில்,

வெயில் கொளுத்தும்

கடும் கோடை விதி முறைகளில்

அவள் நம் மனதினுள் புகுந்து

காது மடலோரம் சொல்வாள்,

“இன்னும் என்னை காண வராததன்

காரணம் என்னவோ?” என்று!


காடு புகுந்தாலே

காட்சி தருவாள்!

அதற்கு முனிவனாக தேவையில்லை!


தூய காற்று மட்டுமே

அவளை சுற்றிலும்

அய்யம் வேண்டாம்...

தூய்மையானவளே அவள்!


மனிதன் அல்லாதவைகளுக்கும்

இல்லை என்று சொல்லாமல்

தன்னுடன் இருக்க செய்வாள்!


காலை வான் மகன்

போடும் சொடுக்களுக்கு

அவள் இஷ்டம் போல் நாட்டியமிடுவாள்;

ஆடிய களைப்பால்

அவள் அங்கமெங்கும்

விய்ர்வை துளிகள் உதிர்க்கும்

‘அது ஓர் அழகிய நறுமணம்!’

என்று முந்தியடித்தபடி

நுகர வரும் கூட்டம் அதிகம்!


அவள் முன்...

யாரும் பெரிதுமில்லை!

யாரும் சிறிதுமில்லை!


அவள் கண்பார்வை படும் வரையில் தான்

மைனர் வீட்டு கோமகன்!

பட்டுவிட்டாலோ...

மையிடும் அவள்

விரல் காட்டும் திசையில்... கோமகன்

தவழும் மழலை செல்வன்!


அவள் மடியில்

எவர் சேர்ந்தாலும்

நான்கு கால்களால்

நடைபழகும்

குழந்தை தான்!


‘இல்லை!

நான் மழலை அல்ல!’

என்று வீம்பளக்கும் சில்மிஷர்களுக்கு

பாசம் காட்டி விழ செய்வாள்!

விழுந்தவன் விழிப்பான்!

சுற்றியும் பார்ப்பான்!

ஏற்கனவே இதே வீழ்ச்சி கண்ட

அம்மாஞ்சிகள் – ஒன்றுமே நடவாதவாறு

எங்கும் நின்று

எள்ளி நகையாடுவர்!

வீழ்ந்தவன் எழுவான்...

பின் தொழுவான்...

‘அழகி உன்

கரங்கள் கீழ்

நான் ஒன்றும் பெரியவன் அல்ல!

எல்லோர் போல்

நானும் ஓர் மழலை தான்...’

என்று கூச்சமே இல்லாமல்

அசடும் வழிவான்


குளிர்விப்பாள்!

மகிழ்விப்பாள்!

அகம் நிறைய

சிரிக்க வைப்பாள்!

மனிதன் ஜனித்த பாதையை

மனிதனுக்கே நினைவூட்டிடுவாள்!


அவளை பிரிந்து

தொலை தூரம் போன பின்பு,

ஒரு கனம்...

திரும்பி நின்று எட்டி பார்க்க செய்வாள்!

‘நம் பின்னால் அவள் வர மாட்டாளா...’

என்று நம்மை ஏங்கவும் வைப்பாள்....


அழகில் சிறந்தவள்

பொலிவுடன் என்றும் மிளிர்பவள்

அந்த உயர்ந்த இடத்திலே தான் இருப்பாள்!

தலைக்கனக்காது...

தன் கீழ் இருக்கும் ஜன தலைகளை நனைத்து!

- அருவி!

- பி.சி.பாலசுப்பிரமணியம்

No comments:

Post a Comment