Tuesday, June 14, 2011

இனிமேல்!

எப்போதும் எந்நேரமும் கிளின்ட் ஈஸ்ட்வுட் திரைப்படங்கள் காண்பது என்பதே ஓர் புது அனுபவம் தான். ஈஸ்ட்வுட் திரைப்படங்கள் என்றாலே அதில் புதுமையும் புத்துணர்ச்சியும் நிரம்ப இருக்கும். இது தீவிர ஈஸ்ட்வுட் ரசிகர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை!

இன்று ஈஸ்ட்வுட் அவர்கள் கடைசியாக இயக்கிய Hereafter என்ற திரைப்படம் பார்த்தேன். வழக்கமாக ஈஸ்ட்வுட் ரசிகர்கள ரசிக்கக்கூடிய விஷயங்கள் பலவும் அழகாய் நெய்து ஓர் நல்ல திரைப்படமாய் அளித்துள்ளார். மிக அதிரடியான காட்சிகள் கொண்டு அதகளப்படுத்தும் ஹாலிவுட் திரைப்படங்களுக்கு இடையே இப்படி ஓர் இயல்பான, ஆனால் நம்மை வெகுவாக சிந்திக்க வைக்க கூடிய விஷயம் ஒன்றை கொண்டு தயாரிக்கப்பட்ட ஓர் படைப்பு இது.

‘Psychic’ என்று சொல்ல கூடிய ஒரு வகை அமானுஷ்ய சக்திகள் கொண்டு உலாவும் மனிதர்களும் அவர்கள் தினந்தோறும் அனுபவிக்கும் சொல்ல முடியா வேதனைகளும் மனதோடு விம்மும் வலிகளும் தான் படத்தின் மைய கருத்து.

எதிர்பாரா விதமாக ஆபத்தில் அல்லது அதிர்ச்சியினுள் சிக்கும் மனிதர்கள் சிலர் இந்த வகை அமானுஷ்ய சக்தியை பெறுகின்றனர். அதன் மூலம் இறந்தவர்களுடன் பேசக் கூடிய அரிய சக்தி அவர்களுக்கு கிடைக்கிறது. அப்படிப்பட்ட ஓர் சம்பவத்தில் சிக்கியவர் தான் படத்தின் நாயகி Marie Lelay. புகழ்பெற்ற தொலைக்காட்சி நிருபரான நாயகி, பெரும் சுனாமி அலையினில் சிக்கி, மரணத்தை தழுவி, சில நிமிடங்களில் மீண்டும் உயிர் பெறுவார். உயிர் பெற்ற பின் அவர் மனதினுள் சில பிம்பங்கள் எழும். அது என்ன, ஏன், எப்படி, என்ற பல கேள்விகளுடன் நடக்கும் அவர், தன் இயல்பு வாழ்க்கையிலிருந்து வழிதழுவி செல்கிறார். விடை அறியும் நேரம் அவரது அனுபவங்களை ஓர் புத்தகமாக தொகுக்கிறார்.

கதையின் நாயகன் George, சிறு வயதிலேயே அனுபவித்த மூளை காய்ச்சலினால் Schizophrenic ஆக மாறி பின் ஒரு Psychic ஆக தற்போது இருப்பார். ஒரு Psychic ஆக இருப்பதன் மூலம் நிறைய பேருக்கு குறி சொல்லி பணம் பார்க்கலாம் என்று அறிவுறுத்துவார் நாயகனின் அண்ணன். ஆனால் அத்தகைய குறி சொல்லும் தருணங்களில் அந்த தான் மனதால் படும் வலியும் வேதனையும் நாயகன் தன் அண்ணனிடம் சொல்லியும் அவர் காதுகளில் அது விழாது. ஒரு Psychic ஆக இருப்பதால், நாயகனை நெருங்கி வந்த பெண்ணும் அவனை விட்டு விலகிடுவாள். வாழ்வே வெறுத்த நிலையில் தன் அண்ணனை விட்டு தனியே சென்றிடுவார் நாயகன்.

வேறொரு கதையில், இணைப்பிரியா இரட்டை சகோதரர்கள். அவர்கள் அம்மா போதை பழக்கத்திற்கு அடிமையானவள். அவளை காப்பாற்றும் பொருட்டு போதையின் தாக்கத்தை குறைக்கும் மருந்து வாங்க செல்லும் அண்ணன் எதிர்ப்பாராத விதமாக ஓர் விபத்தில் உயிர் இழக்கிறான். அதை தாங்கி கொள்ள முடியா தம்பி அண்ணனை நினைத்து வாடுகிறான். அவனது அம்மாவும் சீர்த்திருத்த நிலையத்தில் சேர்க்கப்படுவார். அம்மாவையும், உற்ற அண்ணனையும் இழந்த சிறுவனை வேறொரு தம்பதியினர் தத்தெடுத்து கொள்வர். எனினும் தன் அண்ணன் பற்றிய நீங்கா நினைவுகள் இவனை விடாது துரத்தும். அண்ணனுடன் பேச வேண்டும் என்ற ஆவிகளுடன் பேசக்கூடிய நபர்களை தேடி பிடிப்பான். எல்லோரும் பொய்யானவர்கள். காசுக்காக இந்த வேலை செய்யும் மனிதர்கள். உண்மை இல்லாதவர்கள். இன்னும் தேடுகிறான்...

அப்போது தான் அந்த சிறுவன், கதையின் நாயகனை ஓர் புத்தக கண்காட்சியில் பார்க்கிறான். அந்த புத்தக கண்காட்சியில் நாயகி வெளியிட்ட புத்தகம் வாங்கும் பொழுது, முன் பின் சந்திக்காத நாயகனுக்கும் நாயகிக்கும் இடையில் ஓர் பந்தம் இருப்பதை உணர்கிறார்கள் இருவரும். இருவரது கண்களும் நெருக்கத்தை முன்மொழிந்தன. நாயகன் பேச முற்படும் போது, அவனை பற்றி தெரிந்த சிறுவன் அவனை அழைத்து உதவுமாறு கேட்கிறான். விடாமல் துரத்துக்கிறான். குறி சொல்லும் வேலையே வேண்டாம் என்ற முடிவில் இருக்கும் நாயகன் இந்த சிறுவனின் விடாப்பிடியான நடவடிக்கையால், அவனுக்கு குறி சொல்கிறான். தன் அண்ணன் அவனிடம் என்னென்ன உரைக்க வேண்டுமோ அத்தனையும் உரைக்கிறான். சிறுவன் மிகுந்த மகிழ்ச்சியுடன் வீடு திரும்புகிறான். அன்று இரவே நாயகனுக்கு ஓர் தொலைப்பேசி அழைப்பு வருகிறது. நாயகி தங்கியிருக்கும் விடுதியின் பெயரை கண்டுப்பிடித்து நாயகனுக்கு சொல்கிறான் சிறுவன். எந்தவொரு சந்திப்பும் இல்லாத நாயகனும் நாயகியும் சந்திக்கின்றனர். அவர்கள் யார் என்பது அவர்கள் மனத்தால் உணர முடிகிறது. இணைக்கின்றனர்.

மீண்டும் மெல்லிய இசையால் நம் இதயங்களை உரசிப்பார்த்திருக்கிறார் கிளின்ட் ஈஸ்ட்வுட். முதன்முறையாக Parallel Story Telling வித்தையை கையாண்டிருக்கிறார். கதை எழுதியவர் பீட்டர் மார்கன் (Peter Morgan). நல்ல கதைக்களம். அதற்கேற்ற ஊட்டமிகு நடிகர்கள். நாயகனாக வரும் மேட் டேமனின் (Matt Damon) மற்றுமொரு சிறந்த படம் இது! நாயகியாக நடித்த Cécile de France தனது இயல்பான எதார்த்தமான நடிப்பால் நம்மை ஈர்ப்பார். கதாப்பாத்திரங்கள் அனுபவிக்கும் வலியினை தெளிவாய் உணர்த்தும் ஒளிப்பதிவு. மேலும் இதில் கையாளப்பட்டிருக்கும் Graphics உத்திகள் மிகவும் அருமை. கதையும் கதாப்பாத்திரங்களின் தன்மைகளையும் விழுங்கி விடாமல் அதை உபயோகித்த விதம் அழகு.

‘Hereafter’ கிளின்ட் ஈஸ்ட்வுட் திரைப்படங்களில் இன்னொரு வித்தியாசமான படைப்பு! எந்தவொரு படாடோபமும் இல்லாத இயல்பான சித்திரம்.

- பி.சி.பாலசுப்பிரமணியம்.

No comments:

Post a Comment