Wednesday, June 15, 2011

குற்றமும் குற்ற உணர்ச்சியும்

ஒரு வழுக்கலான நேர் வழி பாதை. அதை கடந்து போனால் மறுப்பக்கத்தில் உண்மை புலப்படும். அந்த பாதையின் கீழ் மிகப்பெரிய பள்ளம். விழுந்தால் பொய்யான உடலுக்கு வலி தெரியாது, மெய்யான மனது புண்படும். அது உணர்த்தும் வலியை வார்த்தைக்களால் வர்ணிக்க முடியாது! மேலும் வழுக்கல் நிறைந்த அந்த பாதை வழி நடப்பது என்பது கடினம். உண்மை எதுவென கண்டறிய முற்படும் ஒரு நல்லவன் அந்த வழுக்கல் பாதையை கடக்கையில் தவறுதலாக கீழே விழுகிறான். அதனால் அவன் மனதால் அனுபவிக்கும் வலியும் வேதனையும் குத்தி தின்னும் குற்ற உணர்ச்சியையும் பற்றி சுழலும் திரைப்படம்தான் ‘Insomnia’ .

நடிப்பிற்கோர் புது வடிவம் தந்த, எனக்கு மிகவும் பிடித்த நடிகர் ஆல் பச்சினோ (Al Pacino) கதாநாயகனாக நடித்த படம் இது. தூக்கமின்றி தவிக்கும் நோய் தான் Insomnia. அவர்கள் கண்கள் குழி விழுந்து காணப்படும். புருவங்கள் எப்போதும் மேல் நோக்கியே இருக்கும். நெற்றி சுருக்கங்கள் பாளம் பாளமாய் வெடித்திருக்கும். நடையில் ஒரு கூன். நிதானமான பேச்சு. சட்டென கோபமுண்டு கத்தி தீர்ப்பது. இத்தனை அம்சங்களும் அழகாய் தன் நடிப்பால் நமக்கு உணர்த்தியிருக்கிறார் ஆல் பச்சினோ.

‘The Machinist’ என்ற மற்றொரு ஹாலிவுட் திரைப்படத்தில் Christian Bale என்ற அற்புத கலைஞன் இதே ‘Insomnia’ நோயால் பாதிக்கபட்டவனாக நடித்திருப்பார். அது மிகவும் மோசமான நிலை! இந்த நோய் அவனை விழுங்கிய நிலை! அந்த படம் ‘Insomniac எனப்படும் தூக்கமின்றி தவிக்கும் ஒருவனை மிக தெள்ளத்தெளிவாக காட்டிய முயற்சி என்பேன்.

இந்த படம் ‘Insomnia’ வில் கதாநாயகனாக நடிக்க மிக சிறந்த நடிகர் ஆல் பச்சினோ மட்டும் தான். அதை தேர்வு செய்ததால் அந்த கதாபாத்திரம் மிகவும் சுவாரஸ்யமானது. அவரது கண் பார்வையின் சிறு அசைவுகளும் நம்மை திரையோடு ஒட்டி அமர செய்யும். சில இடங்களில் மௌனம்! சில இடங்களில் கோபம்! தனது தேர்ந்த நடிப்பால் நம்மை வெகுவாக கவர்வார் ஆல் பச்சினோ. தான் தவறுதலாக செய்யும் செயலை மறைக்க அவர் படும் பாடு. அதை செய்யும் போது அவர் குற்ற உணர்ச்சி அவருடனே பயணித்து அவரை கொஞ்சம் கொஞ்சமாக தின்னும். அதை உணர்வுப்பூர்வமாக அனுபவித்த நிலையை திரையில் பிரதிபலித்துள்ளார். தீயவன் தீமையை செய்யும் போது வருத்தப்பட மாட்டான். அவனுள் மனசாட்சி என்ற ஒன்று இருப்பததையே அவன் மறந்திருப்பான், பல நேரங்களில் மறைத்திருப்பான். ஆனால் ஒரு நல்லவன்! தவறில் தெரியாமல் விழுந்து, அதில் மூழ்கிடாமல் தப்பித்து வெளியேறி வர அவன் உடல் அவன் உடன் வரும்!... வரலாம்! ஆனால் அவன் மனம்... அது அவனது எல்லா செயல்களையும் மென்று தின்னும். அதன் பிடி கொஞ்சம் இறுக்கினால் அவனையே விழுங்கும்! அதே நிலையில் தான் என்ன செய்வது என்பதே தெரியாமல் தத்தளித்து நடக்க, செய்த தவறின் நிழல் அவனை விடாமல் பின் துரத்த, இரவு நேரம் சற்று கண் அய்ர்ந்திட கூட விடாமல் நாயகன் படும் பாடு இப்படம் பார்க்கும் ஒவ்வொருவரும் நாயகனை போலவே உணர்வர்!

சரி! ஆல் பச்சினோ தான் கலக்கியிருக்கிறார் என்றால், இப்படத்தில் மற்றொரு நடிகர், நவரச கலைஞன் ஒருவர் அசத்தியிருக்கிறார். இதுவரை நகைச்சுவை படங்கள் வழி அவரை ரசித்தவர்கள் இப்படம் பார்த்த பின் வாய்பிளந்து தான் போவார்கள்! அவர் பெயர் ராபின் வில்லியம்ஸ் (Robin Williams). இவர் என்ன செய்தார், அப்படி என்ன வித்தியாசம் இப்படத்தில் காட்டியுள்ளார் என்று என்னை கேட்டால், நான் சொல்லி விடுவேன்! ஆனால் எனது எழுத்துக்கள் அவர் தன் ரசிகர்களுக்கு தர விரும்பிய ஆச்சரியத்தை அழித்து விட கூடும். அதனால் அவரது இன்னொரு முகத்தை, இன்னொரு பரிணாமத்தை இப்படத்தை பார்த்து ரசியுங்கள்! நான் வெகுவாக ரசித்தேன்! J

இப்படத்தில் ஹிலாரி சவான்க் (Hillary Swank) என்ற பிரபலமான நடிகை நடித்துள்ளார். மில்லியன் டாலர் பேபி என்ற படம் மூலம் நம்மை கவர்ந்த திறமை மிகுந்த நடிகை! கதை ஆல் பச்சினோ, ராபின் வில்லியம்ஸ் எனும் இரு பெரும் ஜாம்பவான்களை மட்டுமே சுற்றி இருப்பதால் ஹிலாரியின் பெஸ்ட் இந்த படத்தில் இல்லை என்று சொல்லலாம். மற்றபடி கதையின் இறுதிக்கட்டத்தில் அவர் நடித்த விதம் அருமை.

மேலும் இப்படத்தில் நான் கண்டு ரசித்த விஷயம் – படத்தொகுப்பு! மிக அமைதியான தருணங்களில் கதாபாத்திரம் மனதில் சட்டென மின்னி மறையும் பிம்பங்களை கண் மூடி திறக்கும் நொடியில் திரையில் கோர்த்த விதம் ரசிக்கும் படியாக இருந்தது. கதாப்பாத்திரம் என்ன உணர்கிறார் என்பதை நாம் மிக நெருக்கமாக உணர படத்தொகுப்பு வெகுவாக உதவியுள்ளது! படத்தொகுப்பாளர் – Dody Dorn

இப்படம் தொடங்கும் பொழுது பனி பாறைகள் கூர்மையாக வான்நோக்கி பார்த்து நம்மை வரவேற்கும். அங்கிருந்து கதை முடியும் தருணம் வரை காட்சிகள் படமாக்கபட்ட விதம் அழகு. நகரா புகைப்படத்தில் ‘Patterns’ எனப்படும் ஒன்றை எளிதாய் படம் பிடிக்கலாம். ஆனால் நகரும் திரைப்படத்தில் அதை அழகாய் காட்டுவது என்பது கடினமான விஷயமே! அதை இப்படத்தில் கண்டு ரசிக்கலாம். ஒளிப்பதிவாளர் – Wally Pfister

படத்தின் ஒலிப்பதிவும் கவனிக்கத்தக்கதே! சிறு சிறு நகர்வுகளின் மற்றும் மௌனங்களின் முக்கியத்துவம் படத்தின் விறுவிறுப்பிற்கு கை கொடுத்துள்ளது.

இப்படம் முன்னர் இதே பெயரால், இதே கதை கொண்டு வெளிவந்துள்ளது. Norwegian திரைப்படமான அது 1997இல் வெளிவந்தது. அதை தற்போது தன் பாணியில் வித்தியாசமாக இயக்கியுள்ளார் Christopher Nolan. இன்று வரை புதிய முயற்சிகள், வியக்க தக்க கதைகள் கொண்டு நம்மை திக்குமுக்காட செய்த Nolan, திரைப்பட இயக்குநராக தவமிருக்கும் ஒவ்வொருவரின் இதயங்களிலும் ஓர் சிறந்த உயர்ந்த இடத்தில் இருப்பார். இப்படமும் அவரது ரசிகர்களை வெகுவாக கவரும்! திரைக்கதை வடிவமும் மிக நேர்த்தியாக கையாளப்பட்டுள்ளது.

Insomnia – ஓர் நல்ல படைப்பு. முழு நீள Psychological Thriller பார்க்க விரும்புபவர்கள் இந்த படத்தை தேர்ந்தெடுக்கலாம்.

- பி.சி.பாலசுப்பிரமணியம்

No comments:

Post a Comment