Sunday, May 7, 2017

Thrissur Pooram - திருச்சூர் பூரம்

திருச்சூர் பூரம்

மலையாள தேசத்தின் கொண்டாட்டம் என்றாலும், அதன் அழகையும் பெருமையும் விவரிக்க தமிழன்றி வேறெந்த மொழியும் மனதில் உதிக்கவில்லை.

கடந்த ஐந்து வருடங்களாக தொலைக்காட்சிகளில் மட்டுமே கண்டு, நேரில் காண நேரம் இல்லாத வருத்தம் மனதினுள் தேங்கி கிடந்தது. இந்த வருடம், என்ன நடந்தாலும் சரி, பூரம் கண்டே ஆகவேண்டும் என்று மனதில் உறுதி கொண்டேன். என் அப்பா அம்மாவுக்கும் பூரம் காணும் ஆசை வெகுநாளாய் இருந்து வந்தது. மூவரும் புறப்பட்டோம்.

என் அம்மா சொல்ல கேட்டிருக்கிறேன். எந்தவொரு பழம்பெருமை மிகுந்த கோவிலுக்கு செல்ல, நாம் விழைந்த உடனே நடவாது, அக்கோவிலில் வாழும் இறைவன் விழி நம் மீது பட வேண்டும். அவர் விழைந்தால் மட்டுமே, அவரை காணும் பாக்கியம் நமக்கு கிட்டும் என… அது என் மனதில் ஆழமாய் பதிந்திருந்தது.

சென்னையிலிருந்தும் சரி, கோவையிலிருந்தும் சரி, திருச்சூர் புறப்படும் நேரம் வரை மனதில் வேண்டி கொண்டே இருந்தேன். எத்தனை இடர்கள் வரினும் பூரம் காண வேண்டும், வடக்குநாதரான சிவனை தொழ வேண்டும் என்று…

ஒரு வழியாக திருச்சூர் அடைந்தோம். சூரியன் தனது மொத்த வெப்பத்தையும் அன்று திருச்சூரில்தான் அள்ளி தெளித்திருப்பான் போல... கடும் வெயில்! வியர்வையில் குளித்தபடி பேருந்து நிலையத்திலிருந்து கோவிலை நோக்கி மூவரும் நடக்க ஆரம்பித்தோம்.

வழி நெடுக கோவிலை நோக்கி மக்கள். மகிழ்ச்சியில், எதிர்ப்பார்ப்பில், வடக்குநாதரை தொழ, பூரம் கண்டு களிக்க…

வடக்குநாதர் கோவிலை அடைந்தோம். அக்கோவிலின் புறத்தோற்றமும் கம்பீரமும் நம் நெஞ்சு நிமிர செய்யும். சாலையிலிருந்து பல அடி மேல உயர்த்தி கட்டப்பட்ட அந்த கோவில், ரசனைக்குரிய தனது பழமையை சிதையாது பேணி காத்து வைத்திருந்தது. தேக்கு மரத்தால் செதுக்கப்பட்ட அக்கோவிலின் பிரம்மாண்ட கதவுகளும், மர வேலைப்பாடுகளும் இன்னும் என் கண்னை விட்டு அகலாத அழகு.

விசாலமான கோவில். அதற்கு அரணாய் இருப்பது பல அடி உயரமுள்ள மதில் சுவர் மட்டுமல்ல, தன் கால்களான வேர்களும் கைகளான கிளைகளும் நீட்டி உயர்த்தி, அகல விரித்து, பல ஆயிரம் மக்களுக்கு நிழல் தந்து நின்றிருந்த ஆலமரங்களே!

அவைகளிடம் கேட்டறிய தோன்றியது, அக்கோவிலின் வரலாற்றை!

பரந்துவிரிந்துப்பட்ட கோவிலின் கற்பகிரகத்தினுள் நுழையும் போது நடராஜரின் ஓவியங்களில் (MURAL ART) என் உள்ளம் துள்ளியது. கோவிலை சுற்றிய ஓவியங்களும், கலை வேலைப்பாடுகளும் நம்மை வெகுவாய் ஈர்க்கும். இத்தனை அழகும், நேர்த்தியும் மிகுந்த கோவிலை கட்டி எழுப்பிய பெருமை, சக்தன் தம்புரான் என்று மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட, ராஜா ராமவர்மா’விற்கே சேரும். பூரம் பண்டிகையை ஒழுங்குப்படுத்தி, அதன் சீரும் சிறப்பும் இன்றளவும் குறையாது இருப்பதற்கு காரணக்கர்த்தா சக்தன் தம்புரான் என்றனர் அங்கு குழுமியிருந்த மலையாள நண்பர்கள்.

எம்பெருமான் வடக்குநாதரை தொழுதோம்.

இளஞ்சித்தர மேளம் முழங்க, ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட யானைகள் மீது கோவிலை சுற்றி பவனி வந்த இறைவன், வீதியில் காத்திருக்கும் மக்களுக்கு காட்சியளித்தார். பெரும் ஆரவாரம், மேளச்சத்திற்கிடையே யானைகள் வரிசையாய் அசைந்தாடிய படி, மக்களை கண்ட மகிழ்ச்சியில் திளைத்திருந்தது. கூட்டத்தின் இடையே அவை, மெதுவாய் அன்னநடையிட்டு நடந்து வந்து காட்சி நம்மை ஆச்சரியத்திலும் ஆனந்ததிலும் ஆழ்த்தும். குடைமாற்றம், வெடிக்கெட்டு என பல நிகழ்ச்சிகள் அணியணியாய் அரங்கேறின. எல்லாம் ரசித்தோம்.

மழலைகள் பல தன் தாத்தா, தந்தை தோள்களில் அமர்ந்தபடி, கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், மேளதாளங்களுக்கு ஏற்ப தன் பிஞ்சு விரல்களை அசைத்தப்படி ரசித்து கொண்டிருந்தனர். இளையோர் முதல் முதியோர் வரை, இந்து மதத்தினர் மட்டுமல்லாது, கிறஸ்துவர்கள், இஸ்லாமியர்கள் என அனைவரும் ஒன்று கூடி மகிழ்ச்சியாய் கொண்டாடிய திருச்சூர் பூரம் காண அல்ல, அனுபவிக்க வேண்டிய ஒரு கொண்டாட்டம்.

வாழ்வில் ஒருமுறையேனும் திருச்சூர் பூரத்தை அனுபவித்து வாருங்கள்!

No comments:

Post a Comment

Atal 100 - Good Governance Day