என் சிறுவயது ஞாபகம். என்றும் அவர்களை பிஸியாகத்தான் பார்த்திருக்கிறேன். அதுவும் பண்டிகை காலங்களில், கோடைக்கால விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் நேரம் என்று இந்நேரங்கள் அவர்கள் தெய்வத்திற்கு சமமானவர்களாக தெரிவார்கள். அவர்களை காண்பதே அரிதாக இருக்கும்!
அவர்கள் வேலையே அவர்களை முழு நேரம் ஆட்கொண்டிருக்கும்.
அந்த குறுகிய தெருவில் அவர்கள் கடை கூட ஓர் இடுக்கில்தான் இருக்கும். அங்குதான் வேலை முடிந்துவரும் ஆண்கள் பலரும் கூடுவர். ஊர் கதை, உலக கதை எல்லாம் பேசி, டீ, வடை, பஜ்ஜிகளை உள்ளே தள்ளி மாலை நேரம் முழுவதும் அங்குதான் பேசி தீர்ப்பர்.
தீபாவளி தொடங்க இரண்டு மாதங்களுக்கு முன்பே பரபரப்பாவார்கள். அத்தனை வேலை இருக்கும். மலைப்போல் வேலை இருந்தும், சிரித்துகொண்டும், அரட்டை அடித்து கொண்டும் வேலை செய்து கொண்டேதான் இருப்பார்கள்.
அவர்கள் டெய்லர்கள் எனும் தையல்காரர்கள்.
தீபாவளி அதிகாலை குளித்து அவர்களிடமிருந்து அப்பா பெற்று வரும் புது துணிகளுக்காக கண்கள் விரிய காத்திருப்போம். தீபாவளி என்றால் பட்டாசுகள் வெடிப்பது குஷி என்றால், புத்தாடையில் தான் அத்தனை கோடி சந்தோஷம் அடங்கியிருக்கும். அன்று விடியும் வரை நமக்கு புத்தாடை வருமா இல்லையா என்பது கூட உறுதியில்லை.
ஆனால் தன் வீட்டில் தீபாவளி கொண்டாட முடியாமல் வேலையே கதி என்று இருப்பர். அப்போதும் சிரிப்புக்கும் நகைச்சுவைகளுக்கும் தேநீர்களுக்கும் குறைவே இருக்காது!
தீபாவளி அன்று நிச்சயம் புத்தாடை நம் கைவந்து சேரும்! தெருவில் நாங்கள் பட்டாசு வெடித்து கொண்டிருக்க, தையல் மெஷினும் உடன் ஓடிக்கொண்டிருக்கும். வெடி சத்தமும், தையல் மெஷின் சத்தமும் ஒருப்போலே லயித்திருக்கும் அந்த விடிகாலை வேளை இன்னும் என் மனதில் பதிந்துள்ளது.
”டேய் கண்ணா… டீ சாப்பிடுறா…”
என்று அந்த அடர்குளிரில் அவர் கொடுக்கும் ஒரு டம்ளர் சூடான தேநீர், நமக்கு அளிக்கும் கதகதப்பை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை!
நேற்று என் வீட்டருகே இருந்த டெய்லர் ஒருவரை சந்தித்தேன். வயதாகிவிட்டது. அதே சைக்கிள் ஆனால் ஓடித்தேய்ந்திருந்தது. புது மெஷின் ஒன்று சேர்ந்துள்ளது. மீதிமிருக்கும் மெஷின், சாமி புகைப்படங்கள், கட்டை நாற்காலி என அனைத்தும் அப்படியே! மாறாமல்!
ஆரவாரமில்லை. பரபரப்பில்லை. ஆளில்லா சிரிப்பில்லா தேநீரில்லா அவர் ஒருவர் மட்டுமே இருக்கும் கடை பார்க்க சங்கடமாக இருந்தது. அதுவும் தீபாவளிக்கு இரண்டு மூன்று நாட்களே இருக்க…
”எல்லாரும் ரெடிமேடுக்கு போயிட்டாங்க கண்ணா… அதுதான வசதி! போனமா எடுத்தமான்னு…”
என்று சொல்லி அவர் சிரிக்க… என்ன சொல்வதென்று தெரியாமல் பேருக்கு ஒரு சிரிப்பை நானும் உதிர்த்தேன்.
நானும் கூட இந்த தீபாவளிக்கு ரெடிமேட் T-shirt தான் எடுத்துள்ளேன் என்று நினைத்து தலைகவிழ்ந்து அங்கிருந்து வந்தேன்.
கண்ணுக்கு தெரிந்து அழிபவை சில…
கண்ணுக்கு தெரியாமலே அழிபவை பல!
இந்த தையல்காரர்கள், அந்த ’பல’ வகையில் உட்பட்டவர்களே!
No comments:
Post a Comment