Saturday, June 8, 2019

போய் வா… தீரனே!


கடந்த வெள்ளி அன்று, நான் நேசித்த, எனக்கு மிகவும் பிடித்த நாய் ஒன்று காலமானது. அவன் பெயர் தீரா. அவனை பற்றிய நினைவுபகிர்தலே இந்த பதிவு.

என்னுடைய மன ஆறுதலுக்காக…

சிறுவயது முதல் நாய் என்றாலே எனக்கு பயம். நாய் வளர்க்கும் நண்பர்கள் வீடுகளுக்கு கூட செல்வதை தவிர்த்திருக்கிறேன். ஆனால் எந்த நாய் மீதும் கல்லெறிந்ததாய் ஞாபகம் இல்லை. பயம்! ஆதலால் ஒதுங்கிவிடுவேன்.

அப்படியே காலம் கடந்தோடி போக, ஒரு நாள் என்னையும் ஓர் நாய் வந்து சேர்ந்தது. அவன்தான் தீரா. என் தம்பி ராம்நாத் ப்ரியத்துடன் எடுத்து வந்தான். அப்போது ராம்நாத்’தை திட்டி தீர்த்தேன். ”நாய் எல்லாம் நமக்கு எதுக்கு? அதை எப்படி பாத்துப்ப? நாய் வளத்துறது எவ்வளோ கஷ்டம் தெரியுமா? அது அங்க இங்க அசிங்கம் பண்ணும்… அதை clean பண்ணிக்கிட்டே இருப்பியா? இல்ல உன் பொழப்ப பாப்பியா?” என்றெல்லாம் கேட்டிருக்கிறேன்.

முதலில் தீரனை பார்த்தாலே எனக்கு பயமும் பதட்டமும் கூடும். இத்தனைக்கும் மலைப்போன்ற என்னுடன் ஒப்பிட்டு பார்த்தால், அப்போது தீரன் ஒரு சிறு கடுகு. அவ்வளவே! இருப்பினும் பயம்! நாய் என்றாலே பயம்! நான் பயந்து ஒதுங்கி ஓட, அவன் ‘என்னுடன் விளையாடு!’ என்பது போலவே காலை சுற்றி வருவான். அந்த மழலை கண்கள் இன்னும் கூட மறக்கமுடியவில்லை!

எப்படியோ இருவரும் ஒன்றானோம். எங்கள் பேச்சுலர் ரூம்’மில் தீரனும் ஒர் உறுப்பினர் ஆனான். எல்லோருக்கும் இருந்த வேலை பளு, மன அழுத்தம், போன்றவைகளை களையும் எளிய மருந்தாய் அவன் அந்த ரூம்மில் வலம் வந்தான்.

ஒருமுறை அவனோடு கடற்கரை சென்றிருந்தோம். கடல் நீரில் சிறிது கால் நனைத்ததும் பயந்து போனான். பின் பரிச்சியமாகவே அலையோடு அலையாக நீந்தி விளையாடி மகிழ்ந்தான். அதன் பின் என் மடியில் அமர்ந்து கொண்டு இளைப்பாறி கொண்டிருக்க, அவனது கண்களையும் இதயத்துடிப்பையும் கவனித்தேன். கடல் அலை கரையை நெருங்க நெருங்க அவன் கண்கள் பெருத்தன, இதயத்துடிப்பு பீறிட்டது! அலை கலைந்து போக, சாந்தமானான். இப்படியாக கடந்து போனது அன்றைய மாலை பொழுது! இன்னும் அக்காட்சி அகலாது மனதுள் நிற்கிறது.

வாரம் ஒருமுறை குளிக்க நடக்கும் போராட்டம்!!! நாய் வளர்த்துவோருக்கு அது புரியும்! ஞாயிற்றுகிழமையானால் போதும், அவன் உணர்ந்து கொள்வான். ராம்நாத் எழுந்ததும் அறையின் எங்காவது ஓர் மூலையில் ஓடி ஒளிந்து கொள்வான். அதன் பிறகு ஐயா எளிதில் நகரமாட்டார். அவரை வலுக்கட்டாயமாக இழுத்து சென்றுதான் குளிக்க வைக்க வேண்டும். முதல் நீர் மேல் படும் வரை மட்டும் தான் ஆட்டம்! அதன் பிறகு… கற்சிலை போல் நின்று கொடுப்பான். குளித்து முடித்த பின், துடைத்து விடுவோம். இருந்தும் உடலில் உஷ்ணம் வேண்டி பரபரவென அங்குமிங்கும் ஓடி குதிப்பான்.

அந்த பேச்சுலர் அறையில் அவன் உண்டதுபோல் யாரும் சாப்பிட்டிருக்க மாட்டார்கள். திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி பார்சல் வரும். அவனுக்கான தட்டில் போட்டுவைப்போம். ஆனாலும் அதை கொஞ்சம் கூட மதிக்காமல், நாங்கள் சாப்பிடும் காய்ந்த சப்பாத்தியோ, தோசையோ எதிர்ப்பார்த்து எங்கள் வாய்களையே கவனித்தபடி அமர்ந்திருப்பான். உடல் முழுக்க தரையில் படுத்த நிலையில் இருக்க, அவன் கண்கள் மட்டும் மேல் கீழாய் அசைவில் இருக்கும். இலையில் இருந்து எங்கள் கைகள் சப்பாத்தியை பிய்த்து வாயில் இடும்வரை, அவன் கருவிழிகள் அவ்வளவு நேர்த்தியாய் நகரும். இதற்கும் மேல், தன் முகத்தை பாவமாய் வைத்து கொள்வான். அங்கு சுவையான பிரியாணி காத்திருக்க, அதை விடுத்து எங்களுடன் சாப்பிடுவதையே விரும்புவான்.

உறங்கும் பொழுதும் அப்படிதான். யாருடனாவது ஒட்டிகொண்டு படுக்க வேண்டும். ஒருமுறை நானும் ராம்நாத்’தும் அவனுடன் விளையாட முடிவு செய்தோம். தீரன் ராம்நாத்’தை ஒட்டி உரசியபடி படுத்திருக்க, ராம்நாத் மெல்ல நகர்ந்து கொண்டான். உறங்கிகொண்டிருந்த தீரனோ தன் வாலை மட்டும் நீட்டி, அது ராம்நாத் மீது தொட்டிருக்கும்படி வைத்தகொண்டு உறங்கினான். அத்தனை நெருக்கம்!

தீராவின் காதுகள் எனக்கு மிகவும் பிடிக்கும். அதை சீண்டிப்பார்த்து விளையாடுவதுதான் என் வேலை. கொழுந்து வெற்றிலை பாதியில் மடித்தாற்போல் மெல்லிசாய் அவன் காதுகளை பார்த்தாலே… உணர்ச்சிகள் அடக்க முடியவில்லை!!

அதேப்போல் வீட்டிற்கு வெளியே செல்ல, ஊர் சுற்ற என்றும் தயாராய் இருப்பான். இரவு நேரமானால் போதும், கூக்குரலிட்டு கத்தி, அந்த அப்பார்ட்மெண்ட்டையே எழுப்பி விடுவான். ராம்நாத் தன் கையில் தடியும் அவனுக்கான செயினும் எடுத்தவுடன், தீரன் ஆடும் பரதநாட்டியத்தை நீங்கள் கண்டிருக்க வேண்டும். குதியாட்டம் போடுவான்!

பின் அர்த்தராத்தரியில், வீட்டிற்கு வெளியே நின்றிருக்க பிடிக்கும். அந்நேரத்தில் அதிசயமாய் செல்லும் வாகனங்கள், மனிதர்களை உன்னிப்பாக கவனிப்பான். தன் இனத்தவர் வந்தால் மிரட்டும் தொனியில் சில குரைப்புகளும் இருக்கும்.

’போலாமா!’ என்னும் சொல், நமக்கு வெறும் ஒரு சொல். ஆனால் அவனுக்கு அது ஒரு மந்திரம் போல, உத்வேகம் கொடுக்கும் டானிக்’கை போல… ஒரு குழந்தை போல்… குழந்தை போல் அல்ல, குழந்தைதான்! ஒரு குழந்தையாய் அவன் குதிக்கும் அந்த நொடிகள் அனைத்தும் பத்திரமாய் என் மனதுள்!

பல நேரங்களில் என்னை தேற்றிய வாயில்லா நண்பன் அவன். மனம் வாடி அவனருகே செல்கையில், என்னை அங்குள்ள நாற்காலியில் அமர் சொல்வான். தன் கால்களால் அந்த நாற்காலியை மிதித்து, என்னையும் பார்ப்பான். உட்கார்ந்ததும், என் மீது ஏறி கம்பீரமாய் அமர்ந்து கொள்வான். அவனுக்கு அதில் ஒரு இனம்புரியாத பெருமை, சந்தோஷம்! இரண்டு நிமிடம் தாண்டாது, குதித்து கீழிறங்கி விடுவான். பின் காலுக்கு கீழேயே படுத்திருப்பான்.

என் முகம் பாவனைகள் கவனித்து கொண்டிருப்பவன், சட்டென அவன் கால்களை விரிப்பான். ”சும்மாதான இருக்க… தேய்த்து கொடு!” என்று சொல்வது போலிருக்கும். தலை, கால்கள் என வருடி விட, கண்கள் அயர்ந்து ரசிப்பான். அவன் கண்கள் வழி நாம் சுகம் காணலாம்! வருடியது போதும் என்று கை எடுத்தால், ‘உர்ர்ர்ர்ர்ர்’ என்று மிரட்டல் சத்தம் எழும்பும். “போதாது!” என்பதற்கான சிக்னல் அது!

வீட்டிற்கு வெளியே வரும் நம்மை உணர்ந்து, நமக்காய் ஓடிவரும் ஓர் ஜீவன்! இம்மண்ணுலகில் மனிதனல்லாது ஓர் உயிர், மனிதன் மீது அளப்பரிய அன்பும் நன்றியும் கொண்டிருக்குமெனில் அது நாய் தான்!

மனிதர்கள் நமக்கு தான், Moodshift, stress, pressure, aggression, போட்டி, பொறாமை, நம்பிக்கை துரோகம் போன்ற தேவையில்லாத ஆணிகள் எல்லாம் தேவை என்று தலையில் எடுத்து வைத்துகொள்வோம்! ஆனால் நாய்க்கு தெரிந்தது எல்லாம், அது வளர்க்கும் முதலாளி மற்றும் அதனை சுற்றியுள்ளோர் மட்டும்தான். தீரனும் அப்படிதான். உலகமே தெரியாமல் தீரனை போல் இருந்து விடலாமா என்று கூட பல நேரங்களில் ஆசையாய் இருக்கும்!

தீரனை பிரிந்து இன்றோடு மூன்று நாட்கள் ஆகின்றன. அவன் இறந்து செய்தி கேட்கும் பொழுது நான் கோவையில் என் வீட்டில் இருக்கிறேன். நம் வீட்டில், நம் உற்றவர், நம் உறவானவர், நமக்கு மிகவும் நெருக்கமானவர் நம்மை விட்டு சென்றால் இருக்கும் அதே உணர்வு! பேச்சற்று வெளியே சென்றேன். அப்போது குரைக்கும் சத்தம். திரும்பி பார்க்கையில் எங்கள் கீழ் வீட்டில் புதிதாய் ஒரு நாய் வாங்கியுள்ளனர். அது என்னை பார்த்து அழைக்க, நான் சிறிதும் யோசிக்காமல் அதன் அருகில் சென்றேன். அது படுத்து உருண்டு விளையாடியது. அதற்கும் வெகுநேரம் வருடி விட்டேன்… சொல்ல முடியா வேதனையும், அடக்கி கொண்ட கண்ணீருமாய்!

வண்டி எடுத்து வெளியே செல்ல, என் கண்ணில் பட்டவை எல்லாம் அவனே. வாகன நெரிசலுக்கு இடையே சாலையை கடக்க துறுதுறு பார்வையுடன் சாலையோரத்தில்…

டீக்கடை வாசலில், கறிக்கடை வாசலில்…

பெரிய பங்களா முன், இரும்பு கூட்டினுள்…

இரவு நேர ரோந்து முடிந்து ஆழ்ந்த உறக்கத்தில் தெருவோரங்களில், மர நிழல்களில்….

இப்படியாக தீரனின் நினைவுகள் பலவாய்… அலையாய்…

அன்று இரவே எனக்கு மிகவும் பிடித்த, A Dog’s Purpose, திரைப்படத்தை மீண்டும் ஒரு முறை பார்த்தேன்… தனியே சிரித்தும், அழுதும்…

வாழ்வில் சில துயரங்கள் நம்மில் ஆறாத வடுக்களை இட்டு செல்லும். அதுவே அழியா நினைவுகளாய் நம்முள் தங்கி, நமக்கு வலியும் வேதனையும் அள்ளி தரும்!

மாயமென்ன என்றால்… அந்நினைவுகளே பல நேரங்களில் நமக்கு அருமருந்தாக அமையும்! நம்மை ஆசுவாசப்படுத்தும்…

தீராவும் அப்படியே… மனம் நொந்து சாய்கையில் அவனை நினைத்து கொண்டாலே போதும். அவனது அப்பழுக்கற்ற கண்கள், பாய்ந்து நம்மை கட்டிகொள்ளும் பொழுதுகள் என எண்ணற்ற நினைவுகள். அந்நினைவுகள் போதும்! நம்மை, என்னை நகர செய்யும்!

என்றும் என் நினைவில் நீங்காதிருப்பாய் தீரனே!

No comments:

Post a Comment

Atal 100 - Good Governance Day