Tuesday, August 10, 2010

மன்னித்து விடுங்கள்.. இந்த சிறுவனை!

மிக நீண்ட நீல வானம்.

அதற்கு எல்லையென்ற ஒன்று உள்ளதா என்று கூட கேட்க தோன்றும்…

அத்தகைய நீளம்!

ஆல்பாட்ராஸ் (ALBATROSS) என்ற பறவை அந்த வானின் காற்றை கிழித்து கொண்டு மேலேறி பறந்தது.








ஆங்கே மிக உச்சியை அடைந்ததும் எவ்வித கவலையுமின்றி தன் சிறகுகள் விரித்து பறந்து கொண்டிருந்தது.

வானை ரசித்தது.

அது தலை குனிந்து சற்று கீழே பார்த்தது.

அழகாய் வெட்டி வடித்தெடுத்த கனியின் நடுவே அதன் இனிமை குறையா சாறு வழிந்தோடி நின்றது போலிருந்தது அதற்கு.

அது ஓண்டாரியோ(ONTARIO) மற்றும் கனடா (CANADA) நாடுகள் சங்கமிக்கும் இடம்.

நயாகரா (NIAGARA) என்னும் நீர்வீழ்ச்சி அமைந்திருக்கும் பகுதி அது.

உலகின் மிக அகலமான, அழகான நீர்வீழ்ச்சி.

‘கவிப்பேரரசு’ வைரமுத்து சொன்ன சில வரிகள் என் நினைவுகளில்...

'நீர்வீழ்ச்சியென்பதே அழகு! அது நீருக்கு வீழ்ச்சியல்ல... எழுச்சி!' வைரமுத்துவிற்கும் அவர் கொண்ட பேனாவுக்கும் என்றும் மரித்து போகா வரம் வேண்டுகிறேன்.

அந்த நீர்வீழ்ச்சியிருக்கும் பகுதியை கடக்கிறது ஆல்பாட்ராஸ். ஆனால் அங்கு நிலத்தில் விழுந்து மருண்டெழ நீர் மறுத்து அதன் மேல் பரப்பிலேயே நின்றிருக்கிறது. ஆல்பாட்ராஸ் அங்குள்ள மரங்களின் இடையே சென்று மறைந்தது.

நயாகராவின் தாழ்வாரத்தில் நான். உடன் கலைந்த தலைமுடியும் அசைவுகள் மறவா விரல்களுமாய் ஆர் ரஹ்மான். அவர் முன் அவருடைய பியானோ.









உச்சியிலே தஞ்சம் கொண்ட நயாகராவை பார்த்தேன். திரும்பி இசை புயலை பார்த்தேன். வழக்கம் போல் புன்னகை! என் விழிகளின் இமைகள் மூடி திறந்தன. ரஹ்மானின் விரல்கள் அவர் தலைமுடிகளுக்கு இடையே சென்று ஏதோ ரகசிய சொன்னது! அவர் கண்கள் பியானோ கட்டைகளின் மேல் திரும்பின. . . விரல்கள் அவைகளை தீண்டின. . .வறண்ட பூமி மீது முதல் மழை துளி விழ துளிர்த்தெழும் மண் வாசனை போல், நானும் என் சகலமும் நயாகராவின் உச்சியையும் தாண்டி சிறகடிப்பதை உணர்ந்தேன். அந்த பாடலிலுள்ள ஸ்வரங்களினிடயே என்னை நானே தொலைத்தேன். லயித்தேன்!

'ஒரே கனா என் வாழ்விலே , அதை நெஞ்சில் வைத்திருந்தேன் …'

என்ற போது நயாகராவின் மேல் பரப்பில் சிறு இளகல் ஏற்பட்டது

'கனா மெய்யாகும் நாள் வரை , உயிர் கையில் வைத்திருப்பேன் …'

என்ற போது வெகு நாட்களாய் அங்கே காணாமல் போயிருந்த மெல்லிய தென்றல் அழகாய் அசைந்தாடி வலம் வந்தது.

எங்களை வருடியது.

அந்த தென்றலுக்கு நன்றி!

ஏனென்றால், அது கொடுத்த ஸ்பரிசம் நுகர்ந்த ரஹ்மானின் குரல் வானெட்டியதை நான் நிலத்தில் அமர்ந்து ரசித்தேன்.

'வானே என் மேல் சாய்ந்தாலுமே , நான் மீண்டு காட்டுவேன் …'

என்றதும் நயாகராவின் மொத்த நீர்த் தேக்கமும் அதன் தாழ்வாரத்தை வந்தடைந்தது.

















வீடு வந்தடைந்த பெரும் மகிழ்ச்சியில் ஒரே இரைச்சல்!

அது வரை அங்கிருந்த அமைதி அத்தருணத்தில் காணவில்லை

மறுபடியும் என் இசை கலைஞனை பார்த்தேன்

இதற்கும் அதே சலிக்காத பதில் தான்.

புன்னகை!

வானை அலங்கரித்த குரல்

அழகாய் பதமாய் பூமி வந்தடைந்து, இதமான குரலில்

'நீ எனை கொஞ்சம் கொஞ்சினால் , நிலாவையும் வாங்குவேன்...'

என்றது.











நிலம் வந்தடைந்த நீர் துளிகள், தாங்கள் இப்பிறவி பலன் அடைந்ததை உணர்ந்தனர்.

என் மனம் கவர்ந்த பாடல்களில் ஒன்றை அதன் கர்த்தாவே மீட்டிட, அவர் அருகேயிருந்து அதை ரசித்த பெருமிதத்தில் நான்.

இவை அனைத்தையும் பார்த்திருந்த வானமென்ன சும்மாவா இருப்பாள்? தன் மகிழ்ச்சி மிகுதியால் அவள் இருதயம் துறந்து வாழ்த்தினாள். மழை துளிப் பட்டு என் முகத்திலும் ரஹ்மான் முகத்திலும் புன்னகை பூக்கள் முளைத்த குழி வெட்டு.









எழுத்து - 'சிறுவன்' பாலா










No comments:

Post a Comment

Modi Tsunami