Wednesday, September 8, 2010

நானும்... அவரும்...

இதை நான் எழுதலாமா என்று யோசித்தேன். யோசனைகளின் இறுதியில் என்னை அழுத்திய ஒரே வாக்கியம் – 'நீ விரும்புவதை செய்!'

இது விருப்பம் என்று சொல்ல முடியாது. அதற்கும் மேல்.

இது ஒரு தனி மனிதனை துதி பாட நான் எழுதவில்லை. வெறும் வாய் வாக்கில் 'இவர் சூப்பர்!', 'இவரில்லைன்னா சினிமாவே இல்ல!', 'இவர் தான் எல்லாம்!!' என்று உதட்டளவில் பிதற்றும் கும்பலிலும் நானில்லை!

I Like Him!

I Adore Him!

So I am writing about him.

அவர் - நான் ரசிக்கும் ஓர் கலைஞன். ஒரு படைப்பாளி. அவரே மிக சிறந்த படைப்பாளி என்று சொல்ல மாட்டேன். சிறந்த படைப்பாளிகள் பட்டியல் எடுக்கும் போது, அவரை விட்டுக் கொடுத்திடவும் மாட்டேன். அவரே என்னை வெகுவாக ஈர்த்தவர். அவர் படைப்புகள் கண்டு இன்ப களிப்புற்றிருக்கிறேன்! அவரது படைப்புகள் தாங்கி வரும் கதாபாத்திரங்களை என் வாழ்க்கையில் பொருத்தி பார்த்திருக்கிறேன். அந்த கதாபாத்திரங்களாக என் வீட்டு கண்ணாடி முன் நடித்து பார்த்த காலமும் உண்டு!

அபாரம்! அழகு! வித்தியாசம்!

இவைகளே அவர் படைப்பில் என்னை அதிகம் கவர்ந்த விஷயங்கள்!

அவர் படைப்பில் ஒரு காட்சி:

அது ஒரு ரயில் நிலையம். இன்னும் சற்று நேரத்தில் அவ்விடம் விட்டு பறக்க தயாராய் இருந்தான் ரயில்வண்டி.

கதையின் நாயகன் தன் வேலை விஷயமாக பட்டணம் செல்கிறான். அவனது பெற்றோர், உறவினர் எல்லாம் அவனை வாழ்த்தி அனுப்புகின்றனர். எல்லோரிடமும் ஆசீர்வாதங்கள் பெற்றவன், இறுதியில் தன் மனைவியை காண்கிறான். திருமணம் முடிந்து சில நாட்களே ஆகியிருந்த நேரமது. தன்னோடு வாழ விருப்பமில்லாத அவளிடம் எப்படி பேசுவது, என்ன பேசுவது என்ற தயக்கதில் நாயகன் நிற்க, அவனது மனைவி, கதையின் நாயகி, தன் நாயகனின் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தாள். தயக்கதில் பின் தங்கி நின்றிருந்தாள்.

மௌனம்.

ரயில் கூக்குரலிடுகிறான்.

நாயகன் ரயிலேற திரும்ப, "கூட வான்னு சொன்னா, கொறஞ்சா போயிடுவீக?"என்று கலங்கிய கண்களுடன் நாயகி.

"என் கூட வரவே மாட்டேன்னுல கத்திக்கிட்டு கெடந்த..." என்று தயங்கி பதிலளித்தான் நாயகன்.

ரயில் மீண்டும் கூக்குரலிடுகிறான். ஆனால் இதுதான் கடைசி கூவல்!

நாயகன் திரும்பி ரயிலை பார்க்கிறான்.

உடனே நாயகி, "இப்போ கூட கூப்பிட மாட்டிகளா..." என்று வினவ,

"நீ துணி மணி எதுவும் எடுத்திட்டு வரலையே... " என்று அப்பாவி தனமாய் நாயகன் கேட்க, "உங்க காசுல, பட்டணத்துல நாலு சேலை வாங்கி தர மாட்டிகளா?" என்று விவரமான தன் கண்களுடன் ஜொலித்தாள் நாயகி

ரயில் நகர ஆரம்பித்தது. ரயிலில் ஏறிக் கொண்டான் நாயகன். மீண்டும் தன் நாயகியை பார்த்து, ஏதோ யோசனையில், "உனக்கு டிக்கெட் எடுக்கலையே?" என்று வருத்ததுடன் கத்துகிறான் நாயகன்.

"உங்க மடியில உக்காந்திட்டு வர டிக்கெட் எதுக்கு..." என்று பதிலளித்தாள் நாயகி.

கண்ணீர் அவள் கன்னங்களை கடந்ததை பார்த்த நாயகன், ரயிலில் இருந்து இறங்கி, "வா! ஓடி வா!" என்று தன் நாயகியை அழைத்தான். புன்னகை பரவிய உதடுகளும் கண்களுமாய் நாயகி நாயகனை நோக்கி ஓடுகிறாள். அவன் தன் அழகியை ரயிலில் ஏற்றி, தானும் ஏறி இருவரும் மகிழ்ச்சியாய் செல்ல ஆரம்பித்தனர்!

அதுவொரு அழகிய பயணம்! புது வாழ்விற்கான பயணம்!!

அந்த நாயகி புன்னகைக்கும் தருணம் நம் உள்ளங்களும் உதடுகளும் புன்னகைக்கும்!

இக்காட்சியை மறவாமல் தவறாமல் பாருங்கள்!

இதுப் போன்ற வித்தியாசமான காட்சி அமைப்புகளில், நம்மை பரவசப்படுத்துவதும், எதிர்ப்பார்க்க முடியா வண்ண வசனங்கள் மூலம் நம் உள்ளம் முதல் உதடு வரை புன்னகையில் மிதக்க செய்பவர்தான் இயக்குனர் மணி ரத்னம்.

இக்காட்சி இடம் பெற்ற படம் - 'குரு'

நாயகன் - அபிஷேக் பச்சன்

நாயகி - ஐஸ்வர்யா ராய் பச்சன்

இதுப்போல் இன்னும் நிறைய காட்சிகள், நிறைய விஷயங்கள் இவரைப் பற்றி என் மனதில் நீங்காது உள்ளது! சரி எல்லாவற்றையும் இப்போதே எழுதி முடித்து விடலாம் என்றுதான் நினைத்தேன்.

வேண்டாம்!

கொஞ்சம் கொஞ்சமாய் நாமும் ரசித்து நம் நண்பர்களும் ரசிக்க வைப்போம் என்று என் மனதை சமாதானப்படுத்தியுள்ளேன்.

நானும்... அவரும்...

இருவர் கூட்டணி - மீண்டும் தொடரும்...



No comments:

Post a Comment