Friday, September 10, 2010

நானும் அவரும்.... தொடர்கிறது

"ஏதாவது ஒரு படம் பத்தி பேசுங்க!" என்று யாரேனும் சொன்னால்,

முதலில் என் நாவு உச்சரிக்க கூடிய சொல் - 'இருவர்'.

ஆசைகளும் பேராசைகளும்,

அன்பும் காதலும்,

கோபமும் ஆக்ரோஷமும்,

நம்பிக்கையும் அவநம்பிக்கைகளும்,

என்று உச்சம் அடைந்தவனும், உச்சம் அடைய துடிப்பவனும் கண்டு நெகிழக் கூடிய திரைப்படம்.

எனக்கு ரொம்பவே பிடித்த படம் ‘இருவர்’.

முன்பே இப்படத்தில் வரும் ஒரு காட்சி பற்றி எழுதியிருப்பேன்.

இப்படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியையும் ரசித்துள்ளேன்.

நான் மட்டுமல்ல.

என் நண்பர்கள், அருமை தம்பிகளான கீர்த்தி, ராம் நாத், பிரகா என்று அந்த பட்டியல் நீளும்!

ஊர்ஜிதமாக சொல்ல முடியும்!

இனி இப்படி ஒரு படம் எடுப்பது கடினம்.

அதுவும் தமிழ்நாட்டில்!

இருவர் படம் பார்த்த என் வீட்டு மூத்தோர் சிலர் - "இது தேவையில்லாத வேலை! வேலில போற ஓணான எடுத்து வேட்டிக்குள்ள விட்ட கதை ஆகிடுச்சு! அமைதியா படம் பண்ண வேண்டியது தானே. எதுக்கு இந்த அரசியல் குழப்பமெல்லாம்..." என்று மணி சார் மேல் அக்கறை கொண்ட கூட்டம் தான் சொன்னது!

அவர்கள் மணி சார் மீது இருக்கும் பாசத்தினால் அப்படி கூறினார்கள்.

ஆனால், நிஜ கலைஞன் என்பவன் - நிஜத்தை சொல்ல வேண்டும், அதையும் தைரியமாக சொல்ல வேண்டும்!!

(முதலில் சொல்ல வேண்டும்!)

அப்படிப்பட்ட சிக்கலான தமிழக அரசியலை, அவர் பாணியில் பிரித்தெடுத்து தெளிவாய் ஒரு படமாய் காட்டியிருப்பார்.

மணி சாருக்கு அவர் செய்ததில் பிடித்த படமும் இருவர்தான் என்று கேள்விப்பட்டுள்ளேன்.

‘இந்த படம் கலைஞரை வில்லனாக காட்டுகிறது.’

‘இது திமுகவிற்கு எதிரான படம்!’

'மணி சார் அதிமுக சப்போர்ட்டுங்க!'

என்ற கோஷங்களும் எழுந்திருந்தன.

உண்மையில் இப்படம்

ஒரு அழகான நட்பை,

மிக அழகாய் திரையில் சித்தரித்துள்ளது என்று நான் சொல்வேன்

அரசியல், கலை, பகை, பொறாமை என்று எத்தனை இடர்பாடுகள் வரினும்

நல்ல நட்பு அதனை என்றும் நீங்காது களையாது தங்கள் மனதினுள் பாதுக்காத்து வந்த 'இருவர்' - தமிழ் படங்களிலேயே ஓர் அழகிய பதிவு.

(அரசியலில் படங்களில் எனக்கு 'அமைதிப்படை' ரொம்பவே பிடிக்கும்!)

இப்படத்தில் ஒரு காட்சி:

தேர்தல் நேரமது.

தமிழகத்தில் இரு வேறு கட்சிகள் கடும் போட்டிக்கிடையே மோதும் தருணம்.

அக்கட்சிகளின் இரு தலைவர்களும் ஒரு திருமண மேடையில் சந்திக்கின்றனர்.

ஒரு தலைவர் மணமக்களை வாழ்த்திவிட்டு மேடையின் கீழ் அமர்ந்திருக்கிறார்.

மற்றொரு தலைவர் மணமக்களை வாழ்த்திவிட்டு கீழே இறங்கி வருகிறார்.

அவர் உடனே தன் நண்பனான எதிர்க்கட்சி தலைவரிடம், அவர் அருகே சென்று அமர்கிறார்.

நலம் விசாரிக்கிறார். இருவரும் பழைய நட்பின் இனிமை ததும்ப பேசிக் கொண்டிருக்கின்றனர்.

புன்னகைகள், தோளோடு தோள் தழுவல்கள் என்று அவர்கள் உரையாடல் நீண்டது.

"தேர்தல் நேரம்! நம்ம இப்பிடி ஒன்னா பேசறது தெரிஞ்சா பத்திரிக்கை காரங்க வேற மாதிரி எழுதீடுவாங்க!" என்று சிரித்த படியே ஒரு நண்பர் அங்கிருந்து விலகி செல்கிறார்.

அதை புரிந்து சிரிக்கிறார் மற்றொருவர்.

இவ்வளவு அழகாய் ஓர் காட்சி!

அரசியல் நாகரீகம் காத்து தங்கள் நட்பையும் மிக மென்மையாய் வெளிக்காட்டிய விதம் அருமை!

இது தான் இப்படத்தின் மிக முக்கிய காட்சி என்று நான் கருதுகிறேன்.

இதே போல் எண்ணற்ற காட்சிகள் இந்த படத்தில் உண்டு.

ரசனைகள் தொடரும்...

:-)

No comments:

Post a Comment