Sunday, October 3, 2010

எளிமையே தன் உடைமையாய்...

வெகு நாளாய் ரசித்த ஓர் விஷயம் இது. இதை பற்றி ஒரு சிறு குறிப்பாவது எழுத வேண்டும் என்ற ஆவல் நீண்டு கொண்டே இருந்தது. இப்போது அதற்கான சரியான நேரம் அமைந்துள்ளது.

இம்மனிதனை கண்டு வியக்கிறேன்.

இவர் கைப்பட்டாலே அது விலை மதிக்க முடியா ஓர் பொக்கிஷம் ஆகிறது!

இவர் இசை கேட்டு வளர்ந்த பல கோடி உயிர்களில் நானும் ஒருவன்.

இன்று எத்தனையோ தொழில்நுட்ப முன்னேற்றம் கண்ட இவர் துறையில், இவருடன் பயணிக்கும் துடிப்பு மிக்க இளையயோர்கள் மத்தியில் இன்றும் ஓர் ஜாம்பவானாக, வயது முதிர்ந்தும் ஓர் இளைஞனாக வலம் வரும் ஞானி - நம் இசை ஞானி இளையராஜா அவர்கள்!

"இனி இளையராஜா இல்லப்பா! அவர் டைம் அவுட்!" என்று கட்டம் கட்டினர் சிலர். ஆனால் அதையெல்லாம் தாண்டி மெதுவாய் பக்குவமாய் தன் இசையை நேசித்து அதனுடன் ஓர் வாழ்க்கை வாழும் மேதை!

ஏ ஆர் ரஹ்மான் அவருடைய வாழ்க்கை பாதை பற்றி ஓர் தொடர் விகடனில் வெளிவந்து கொண்டிருந்தது. அதில் ஒரு முறை ராஜா சார் பற்றி ரஹ்மான் மெய்சிலிர்க்கும் உண்மை ஒன்று சொன்னார்.

அதாவது தான் இசை உலகில் நுழையும் தருணம் ஐரோப்பிய அமெரிக்க கண்டத்தில் புகழ் பெற்ற இசை மேதைகள் - மைக்கேல் ஜாக்சன், பீட்லெஸ், எல்விஸ், ஜிமி ஹென்றிக்ஸ். அப்போது இவர்கள் பாடல்கள் மீது மக்களுக்கு பிரியமும் மோகமும் அதிகமிருந்தது. ஏன் அப்படி ஒரு Craze என்று ஆராய்ந்தார் ரஹ்மான். இவர்கள் இத்தனை அழகாக நேர்த்தியாக பாட காரணம் போதை பொருட்கள் உபயோகிப்பதாலேயே என்று நம்பினார் அவர். பின் ராஜா சாரின் குழுவில் சேர வாய்ப்பு கிட்டியது ரஹ்மானுக்கு. அங்கு போன பின் தான் ராஜா என்ற மனிதனை நேரில் பார்க்கிறார். ஹார்மோனியம் கொண்டு இசை மீட்டி, எல்லோர் மனங்களை கவரும் அந்த வித்தை எப்படி இவருக்கு சாத்தியமாயிற்று என்ற கேள்வி ரஹ்மான் மனதில் எழுந்தது.

அவர் புரிந்து கொண்டது ராஜா என்றாலே எளிமை. ஹார்மோனியம் கையில் ஏந்தி நிற்கும் ஓர் துறவியினை போல் தென்பட்டார் ராஜா சார். அப்போது புரிந்து கொண்டார் நம் 'இசை புயல்' எளிமை இருக்கும் இடத்திலேயே உண்மையான உன்னதமான கலை இருக்கும் என்று!

ராஜா சாரின் மகனான யுவன் ஒரு முறை தொலைக்காட்சி பேட்டியில் சொன்னார். "அப்பா அவரோட ஸ்டுடியோல நுழையற நேரம் பாத்து அங்கே இருக்கிற கடிகாரத்தின் நேரத்தை சரி செய்யலாம். சரியா எழு மணிக்கு அவர் ஸ்டுடியோல இருப்பார்! அவ்வளோ Punctual!"

நான் ரசிப்பதில், தினமும் கேட்பதில் ராஜா சார் குரலால் மெருகு ஊற்றப்பட்ட 'திருவாசகம்' நிச்சயம் இருக்கும்!

ராஜா சார் இசை அமைத்த எல்லா பாடல்களுமே அழகு, வனப்புடையவை! அதில் என்னை கவர்ந்த மற்றுமொரு இசை அவரது 'How to name it?'என்ற ஆல்பத்தில் 'I met Bach in my house' என்ற இசை அமைப்பு பிரமிப்பிற்குள் ஆழ்த்தும் நம்மை! உண்மையில் பாக் என்ற அந்த இசை மாமேதை, இதை சொர்க்கத்தில் அமர்ந்து கேட்டு மெய்சிலிர்த்துப்பார் என நம்புகிறேன்!

இந்திந்த இசை கருவிகளில் தான் ராஜா சார் கை தேர்ந்தவர் என்றில்லை. அவர் இசை அமைப்பில் உள்ளே வரும் அனைத்து கருவிகளுக்கும் ஓர் அடையாளம் தருவார். ஓர் முக்கியத்துவம் அளிப்பார். சமிபத்தில் வந்த 'நான் கடவுள்' படத்தில் உடுக்கை அறைந்து உறங்கும் மனங்களை எழுப்பினார் ராஜா சார்! அதன் அதிர்வுகள் நம் சப்த நாடிகளிலும் ஒலிக்கும்! இதை நானும் என் ஜுனியர் சந்தானமும் அடிக்கடி சொல்லி ஓர் மெய் சிலிர்ப்பை உணர்ந்து ரசிப்போம்!

அது போல எண்ணற்ற பாடல்கள்!

இப்போது சிறந்த இசைக்காக தேசிய விருது வாங்கி விட்டு மழலை சிரிப்புடன் உலா வருகிறார். 'பழசி ராஜா' என்ற படத்தின் மூலம் இன்றும் தான் 'இளைய' ராஜாதான்! யாருக்கும் எதற்கும் சளைக்காத ராஜாதான்! என்று கம்பீரமாய் உணர்த்தியதாய் நான் உணர்கிறேன். இது இன்றைய இசை அமைப்பாளர்களுக்கு பின்னணி இசை என்றால் என்ன, அதன் தன்மை, அவை உணர்த்த கூடிய விஷயங்கள் பற்றி பாடம் எடுக்கும் வண்ணம் உள்ளது!

இப்போதும் அக்காட்சிகள் பற்றி நினைக்கும் போது - வீரம், வேதனை, வெற்றி, வலி, போன்ற உணர்வுகளுக்கு நம் மனதில் ஆரம்பித்து கடைசியாக கண்கள் வழி சொறியும் கண்ணீரே அவர் கண்ட வெற்றி! இசையமைப்பாளராய் மக்கள் மனதில் ஆழ பதிந்த ஓர் அற்புதமான உன்னதமான மனிதன் வாழ்ந்த காலத்தில் அவர் மீட்டிய இசையில் லயித்து மகிழ்ந்து குலாவும் ஓர் ரசிகனாய் நானிருப்பதில் பெருமை கொள்கிறேன்!

என்றும் நின் படைப்புகள் மக்களை புதுப்பிக்கட்டும்!












ராஜா சார் பற்றிய என் ரசனைகளை மேலும் பதிவு செய்வேன்.

- பி சி பாலசுப்பிரமணியம்.

:-)

No comments:

Post a Comment