Thursday, June 2, 2022
இசைஞானி - ரமணமாலை
எண்ணுத்தற்கரிய ரசிகர்கள் போல நானும் இளையராஜா இசையில் லயித்துள்ளேன். 'மழை, காபி, ராஜா' என்று கூறும் வகையறாக்களில் நானும் ஒருவன்!
ஆனால் இளையராஜா எனும் மனிதனை உணர நீண்ட நெடும் காலமாயிற்று.
இளையராஜா அவர்களின் 'ரமணமாலை' எனும் இசைப்பேழை கேட்கையில், அவர் கடந்து சென்ற கடினமான பாதையை நாம் உணர முடியும்.
//ரமணமாலை கேட்கும் பொழுதுகளில் என்னுள் எழும் எண்ண ஓட்டமே இந்த பதிவு//
இசை உலகின் ராஜாவாக (இன்றும் என்றும் அவர் இசையுலகின் ராஜாதான்!), வியாபார ரீதியில் பெரும் உச்சத்தில் மிளிரும் சமயம். உங்கள் இசை இருந்தால் மட்டுமே எங்கள் திரைப்படம் வெற்றியடையும் என தயாரிப்பாளர்களும் நடிகர்களும் இளையராஜா அவர்களை வட்டமிட்டு மொய்த்த காலம். அப்படிப்பட்ட காலத்தில் சராசரி மனிதனுக்கும் தலைகனத்திடாத்தான் செய்யும். அத்தருணம் இளையராஜா கெட்டியாக பிடித்துக் கொண்டது திருவண்ணாமலை மஹானான ரமணமஹரிஷியை. இன்று வரை தன்னை ரமணரின் அடிமை என்று கூறுவதில் பெருமைக்கொள்வார் ராஜா. அந்த மஹானிடம் தன்னை முழுவதுமாக அர்பணித்தார், சமர்ப்பித்தார்.
செல்வம், புகழ், தற்பெருமை, தலைக்கனம் போன்ற மாயைகளில் இருந்து தன்னை காத்து வழிகாட்டுமாறும் அருளும்படியும் இறைஞ்சுதலே - இளையராஜாவின் ரமணமாலை.
அதுவே குருபக்திக்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டும் கூட!
ஓர் எளிய சீடன் தன்னுள் ஓராயிரம் கேள்விகளோடும் குழப்பங்களோடும், தன் குருவின் கருணை சொறியும் கண்கள் முன்னால், தனக்கு தெளிவு வேண்டும், இப்பிறவி கடைத்தேற வழி காட்ட வேண்டும் என்று கண்கள் குளமாகி, நிற்கதியாய் நிற்பது போல அமைந்திருக்கும் ரமணமாலை.
இது இளையராஜா ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரும் கேட்டு உணர வேண்டிய ஓர் உன்னதமான படைப்பு.
தன்னையும் உலகையும் உணர்ந்த ஞானி - நம் இசைஞானி.
அவரை 'சாமி' என்று வாஞ்சையோடு அழைப்பார் தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இளையராஜாவும் தலைவரை 'சாமி' என்றே அழைப்பார்.
வாழ்க்கையெனும் பாலைவனமதில் நடந்து களைத்து நிற்கையில், வரமாய் தென்பட்ட ஆன்மீக மரநிழலின் கீழ் இளைப்பாறும் சாமிகள்!
ஏ.ஆர்.ரஹ்மான் ஒருமுறை இளையராஜா பற்றி கூறுகையில், இசையுலகம் போதைப்பொருட்களால் ஆட்கொள்ளப்பட்ட போறாத காலம். போதை வழி சென்றாலே இசையமைக்க முடியும் என்பன போன்ற மூடநம்பிக்கைகள் உதித்த பொல்லாத காலம். அக்காலத்திலேயே எவ்வித தீய பழக்கங்களிலும் சிக்கடாது, ஓர் துறவியை போல், தூய வெண்ணிற ஆடையணிந்து, தன் இசையையே போதையாக்கி, மக்களை தன் பக்கம் ஈர்த்தவர் இளையராஜா என்றார்.
அப்படிப்பட்ட இதைமேதை, ராகதேவன் இசைஞானிக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment